×

குடந்தையில் பலத்த மழை ரயில் இன்ஜின் மீது மரம் விழுந்தது : அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்

கும்பகோணம்: குடந்தையில் நேற்று அதிகாலை பலத்த காற்றுடன் மழை கொட்டியது. அப்போது தண்டவாளம் அருகே உள்ள ஒரு மரம் முறிந்து ரயில் இன்ஜின் மீது விழுந்தது. இதில் இன்ஜின் கண்ணாடிகள் உடைந்தது. பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கி டெல்டா மாவட்டங்களில் அவ்வப்போது பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் நேற்று காலை தஞ்சை, கும்பகோணம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதிகாலை இடி, மின்னல், பலத்த காற்றுடன் மழை பெய்துகொண்டிருந்தது. அப்போது சென்னையில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் கும்பகோணம் நோக்கி வந்து கொண்டிருந்தது.

அதிகாலை 4.42 மணிக்கு கும்பகோணத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள நரசிங்கம்பேட்டை என்ற இடத்தில் வந்தபோது திடீரென தண்டவாளம் அருகே உள்ள ஒருபெரிய வேப்பமரத்தின் பெரிய கிளை முறிந்து ரயில் இன்ஜின் மீதுவிழுந்தது. இதில் இன்ஜினின் பக்கவாட்டு கண்ணாடி உடைந்தது. இதன் வழியாக மழை நீர், டிரைவர்கள் இருக்கும் பகுதியில் வழிந்துகொண்டிருந்தது. இந்த கிளை பயணிகள் பெட்டியில் விழுந்திருந்தால் பயணிகளுக்கு காயம் ஏற்பட்டிருக்கும். அதிர்ஷ்டவசமாக இன்ஜின் மீது விழுந்ததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.உடைந்த கண்ணாடியுடன் ரயிலை கும்பகோணம் ரயில்நிலையம் கொண்டு சென்று நிறுத்தினர். மழை பெய்து கொண்டிருந்ததால் உடைந்த கண்ணாடியுடன் செல்ல முடியாது என்பதால் தஞ்சையில் இருந்து வேறு இன்ஜின் வரவழைக்கப்பட்டு அந்தியோதயா எக்ஸ்பிரசில் பொருத்தப்பட்டது. இதன்பின், ரயில் புறப்பட்டு சென்றது.



Tags : Kundana ,passengers , Heavy rains , tree ,engine,train, survived
× RELATED சென்னை நோக்கி வந்த அரசுப் பேருந்து,...