×

அரசியல் சாசனத்தை நிலை நாட்டுவதில் ஆளுநர்களுக்கு முக்கிய பங்கு: ஜனாதிபதி பேச்சு

புதுடெல்லி: ‘‘அரசியல் சாசனத்தை நிலை நாட்டுவதில் ஆளுநர்களுக்கும், துணை நிலை ஆளுநர்களுக்கும் முக்கிய பங்குள்ளது,’’ என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார். மாநில ஆளுநர்கள், யூனியன் பிரதேங்களின் துணை நிலை ஆளுநர்களின் மாநாடு டெல்லியில் நேற்று நடந்தது. இதில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ராம்நாத் கோவிந்த் பேசியதாவது: அனைத்து ஆளுநர்களுக்கும் பொது வாழ்வில் அதிக அனுபவம் உள்ளது. இந்த அனுபவம் மூலம், மக்கள் அதிக பலன் அடைய வேண்டும். அரசியல் சாசனத்தை பாதுகாப்பது மட்டும் ஆளுநர்களின் பங்கு அல்ல. மாநில மக்களின் நலன் மற்றும் சேவையிலும் ஆளுநரின் பங்கு உள்ளது. நாம் அனைவருமே மக்களுக்காகத்தான் பணியாற்றுகிறோம். அவர்களுக்கு நாம் பதில் அளிக்க கூடியவர்கள்.

நாட்டின் நலனுக்காக ஒத்துழைப்புடன் கூடிய கூட்டாட்சியும், ஆரோக்கியமான போட்டியுடன் கூடிய கூட்டாட்சியும் அவசியம். இவற்றை அமல்படுத்துவதில், அரசியல் சாசன முறையை நிலைநாட்டுவதில் ஆளுநர்களுக்கும், துணை நிலை ஆளுநர்களுக்கும் முக்கிய பங்கு உள்ளது. ஒத்துழைப்புடன் கூடிய கூட்டாட்சி என்பது, மத்திய அரசும் மாநில அரசும், உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் இணைந்து மக்களின் நலனுக்காக பணியாற்றுவது. போட்டியுடன் கூடிய கூட்டாட்சி என்பது, மாநிலங்களுக்கு இடையேயும், மத்திய அரசுடனும் நடைபெறும் போட்டி.  உள்நாட்டு பாதுகாப்பு, ஒருங்கிணைந்த வளர்ச்சியில் பழங்குடியினர் வளர்ச்சி மற்றும் அதிகாரத்துக்கும் தொடர்பு உள்ளது. ஆளுநர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட அரசியல் சாசன அதிகாரத்தை பயன்படுத்தி, பழங்குடியினருக்கு சரியான வழிகாட்டுதலை வழங்கி, அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும். வளர்ச்சியின் பின்னணியில் பழங்குடியினர் வளர்ச்சியும் உள்ளது.

புதிய இந்தியாவின் புதிய பணிகளுக்கு தகுந்தபடி இந்தாண்டு மாநாட்டின் ெகாள்கை திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், இந்த மாநாடு பயனுள்ளதாக இருக்க வேண்டும்.  நாட்டின் நீர் பயன்பாட்டை குறைத்து, நீர் வளங்களை பாதுகாப்பதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டம் போல், ஜல் சக்தி அபியான் திட்டத்தையும், மிகப் பெரிய இயக்கமாக நாம் மாற்ற வேண்டும். இந்தியாவின் அறிவு சக்தியை அதிகரிக்கும் இலக்கோடு, நமது புதிய கல்வி கொள்கை உள்ளது. இந்த லட்சியத்தை நனவாக்கும் வகையில், ஆராய்ச்சி மற்றும் புதுமையை மேம்படுத்துவதில் அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் முயற்சிக்க வேண்டும். பல்கலை வேந்தர்களாக உள்ள ஆளுநர்கள், தங்கள் பொறுப்பை உணர்ந்து பணியாற்ற வேண்டும். எதிர்கால சந்ததியினர் திறமையையும், அறிவையும் பெறும் விதத்தில் முறையான வழிகாட்டுதலை ஆளுநர்கள் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

‘மக்களின் தேவையை அறிந்து பணியாற்றுங்கள்’
ஆளுநர்கள்  மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, ‘‘அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டு 70வது ஆண்டை நாம் கொண்டாடும் வேளையில், இந்திய அரசியல் சாசன சேவைகள் மற்றும் மக்களின் கடமைகளையும், பொறுப்புகளையும் சுட்டிக் காட்டும் விதத்தில் ஆளுநர்களும், மாநில அரசுகளும் பணியாற்ற வேண்டும். அரசு இயந்திரம், நாட்டு மக்களுடன்  இணைந்து செயல்பட வைப்பதில் ஆளுநர்களின் பங்கு முக்கியமானது. சிறுபான்மையினர் உட்பட சமூகத்தில்  பின்தங்கிய மக்களின் தேவைகளை கேட்டு, அவர்களின் முன்னேற்றத்துக்காக  ஆளுநர்களும், துணை நிலை ஆளுநர்களும் பணியாற்ற வேண்டும். 2025ம் ஆண்டுக்குள் இந்தியாவில் டி.பி நோயை ஒழிக்க வேண்டும். இதற்கான விழிப்புணர்வை பரப்புவதிலும் ஆளுநர்கள் ஈடுபட வேண்டும்,’’ என்றார்.

மோடி, அமித்ஷாவை சந்திக்க தமிழக ஆளுநர் திட்டம்
கவர்னர்கள் கூட்டத்துக்கு பின்னர், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை தனியாக சந்தித்து பேச திட்டமிட்டு அதற்காக நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நிலவும் முக்கியப் பிரச்னைகள் குறித்து பிரதமருடன் கவர்னர் பேசலாம் என்று கூறப்படுகிறது. இன்று 2வது நாள் கவர்னர்கள் மாநாடு நடைபெறுகிறது.

Tags : Political Charter, Governors, President
× RELATED தீப்பிடித்து எரிந்த சாலை: ஆந்திராவில் பரபரப்பு