×

உளுத்தம்பருப்பு விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் இட்லி, தோசை, வடை விலை ஏறிப்போச்சு: பழைய சாதத்துக்கு மாறிய மக்கள்

சென்னை: இட்லி, தோசை, பொங்கல் என காலை டிபனுக்கு வடைதான் மேட்ச். ஆனால் உளுத்தம்பருப்பு விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால்,  இட்லி, தோசை, வடைகளின் விலை ஓட்டல்களில் உயர்ந்துள்ளது. இதனால், ஏழை, நடுத்தர மக்கள் காலை நேரத்தில் டிபன் சாப்பிடுவதற்கு பதிலாக பழைய சாதம் சாப்பிட மாறியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் உட்பட தமிழகத்தில் உளுந்து விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த இரு மாதங்களுக்கு முன் கிலோ 90க்கு விற்கப்பட்டு வந்த உளுத்தம்பருப்பு தற்போது கிலோ 140 ஆக உயர்ந்துள்ளது. பாக்கெட்டில் விற்கப்படும் உளுத்தம்பருப்பு கிலோ ₹150 ஆக விற்கப்படுகிறது. இதனால், ஓட்டல்களில் இட்லி, தோசை, உளுந்து வடை ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளது. சில ஓட்டல்களில் வடை சுடுவதையே நிறுத்திவிட்டனர். ஒரு வடையின் விலை 15ல் இருந்து 20 ஆக உயர்ந்துள்ளதால் வடை பிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

வடையின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளதால் காலை டிபனுடன் வடை சாப்பிடுவதையே பலரும் தவிர்த்து வருகின்றனர். இந்த ஆண்டு கர்நாடகாவில் பருவ மழை ஏமாற்றிவிட்டது. சரியான அளவு மழையில்லாத காரணத்தால் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய தானியங்களின் உற்பத்தியில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.பருப்பு வகைகளின் வரத்து இல்லாத காரணத்தால், தமிழகத்தில் அதன் விலை அதிகரித்துள்ளது. இதனால் தோசை, இட்லி, வடை ஆகியவற்றின் விலையை ஓட்டல்காரர்கள் கணிசமான அளவுக்கு உயர்த்தி விட்டனர். பல இடங்களில் விலை உயர்வுக்குப் பதில் வடையின் அளவை சுருக்கிவிட்டனர்.இரண்டு இட்லி 20க்கு விற்கப்பட்டன. ஆனால் இப்போது 10 அதிகரித்து 30க்கு விற்பனை செய்யப்படுகிறது. வடை விலையும் உயர்ந்துவிட்டது. இதே போல், இரு மாதங்களுக்கு முன்பு வரை ஒரு தோசை 50க்கு விற்கப்பட்டது. தற்போது அதன் விலை ₹60 ஆக உயர்ந்துவிட்டது.விலை உயர்வு காரணமாக சாலையோர கையேந்தி பவன்களில் வடை சுடுவதையே நிறுத்தி விட்டனர்.

பெரிய ஓட்டல்கள் விலையை உயர்த்தியதால், சிறிய ஓட்டல்காரர்களும் இட்லி, தோசை விலையை உயர்த்தி விட்டனர். இந்நிலையில், வெங்காயம் விளையும் தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஓட்டல்களில், இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள வைக்கப்பட்டிருந்த வெங்காய சட்னி, அனைத்து ஓட்டல்களிலும் நிறுத்தப்பட்டு உள்ளது. வெறும் தேங்காய் சட்னி மட்டுமே வைக்கப்படுகிறது. இதனால், ஏழை, நடுத்தர மக்கள் காலை வேளையில் டிபன் சாப்பிடுவதற்கு பதிலாக, பழைய சாதம் சாப்பிடும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

Tags : Ulattum pulses, price, idli, dosa, vadai
× RELATED 36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத்...