×

அலட்சியத்தால் கர்நாடகத்திற்கு தென்பெண்ணை ஆற்று நீரை தாரை வார்த்து கொடுத்த தமிழகம்: 4 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கும் .,, 5 மாவட்ட விவசாயிகள் வேதனை

சேலம்: தமிழக அரசின் மெத்தனத்தால் கர்நாடகம், தென்பெண்ணையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கான அனுமதியை பெற்றிருப்பதாகவும், இதனால் 5 மாவட்டங்களில் 4லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கும் என்றும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.  கர்நாடகா மாநிலம்  நந்திமலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆறு, தமிழகத்தில்  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள கொடியாளம் பகுதி வழியாக கெலவரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி நீர்தேக்க திட்ட அணை,  திருவண்ணாமலையில் உள்ள சாத்தனூர் அணை உள்ளிட்ட பல்வேறு நீர்தேக்கங்களை  நிரப்பி தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம்,  கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 4 லட்சம் ஏக்கர் விளை நிலங்களை  செழிப்படைய செய்கிறது. இதனால் லட்சக்கணக்கான விவசாயிகள் பயன்  பெறுகிறார்கள்.

இந்நிலையில் கர்நாடக அரசு, தென்பெண்ணையாற்றின்   குறுக்கே ஏர்க்கோல் என்ற இடத்தில் மிகப்பெரிய தடுப்பணையை கட்டி நீரை தேக்கி   வைக்க திட்டமிட்டுள்ளது. இந்த நீரை கர்நாடகத்தின் பங்காருபேட்டை, கோலார்   பகுதிகளுக்கு எடுத்துச் செல்லவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.     இதற்கான  திட்டம் ₹1250 கோடியில் செயல்படுத்தப்படுகிறது.  தற்போது தடுப்பணை கட்டுவதற்கான அனுமதியை உச்சநீதிமன்றம், கர்நாடகத்திற்கு வழங்கியுள்ளது. இதனை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதில், தென்ெபண்ணையாற்றின் குறுக்கே, கர்நாடக அரசு மேற்கொண்டுள்ள 5திட்டப்பணிகளுக்கு தடை விதிப்பதற்கு, தமிழகத்தின் சார்பில் எந்த காரணமும் சரியாக சொல்லப்படவில்லை என்ற ரீதியில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த சில  வருடங்களாகவே தென்பெண்ணை ஆற்றை குறிவைத்து கர்நாடகம், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதை கண்டும், காணாமல் தமிழக அரசு இருந்ததே, இதற்கு முக்கிய காரணம் என்று கண்ணீர் வடிக்கின்றனர் 5மாவட்ட விவசாயிகள்.

இது குறித்து தென்பெண்ணையாற்று பாசன விவசாயிகள் கூறியதாவது:  தமிழககத்தில் தென்பெண்ணை ஆறு சுமார் இரண்டாயிரம் ஏரிகளில் நிரம்பி, சுமார் 4 இலட்சம் ஏக்கர் விளைநிலங்களுக்கும், குடிநீருக்கும் பயன்பட்டு வருகிறது. தென்பெண்ணை ஆற்றில் தமிழ்நாட்டுக்கு வரும் ஒட்டுமொத்தத் தண்ணீரையும் தடுப்பதற்காக கர்நாடக அரசு ஒரத்தூர் ஏரியில் மிகப்பெரிய நீரேற்று நிலையம் அமைத்து, அதன் மூலம் முழுத் தண்ணீரையும் ஒசகோட்டா ஏரிக்கு திருப்பி, அங்கிருந்து கோலார் தங்கவயல், மாலூர் பகுதிகளில் உள்ள இருநூறுக்கும் மேற்பட்ட ஏரிகளுக்கும், குண்டூர், மானியங்கிரி, சிக்கத்திருப்பதி ஏரிகளுக்கும் கால்வாய் மூலம் கொண்டு செல்ல 5ஆண்டுகளுக்கு முன்பே, திட்டம் தீட்டி இதனைச் செயல்படுத்தியது. இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் தென்பெண்ணை ஆற்றை முழுமையாக ஆக்கிரமிப்பதற்கான திட்டங்களை கர்நாடகம் செய்துள்ளது. இந்த முயற்சி தமிழகத்துக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

மேலும், இது இரு மாநிலங்களுக்கு இடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை மீறும் செயலாகும். எனவே 1892ம் ஆண்டு ஒப்பந்தப்படி புதிய அணை கட்டோ அல்லது வேறு கட்டுமானங்களுக்கோ அனுமதிக்க கூடாது என்று பிரதமருக்கு கடிதம் எழுதினார். ஆனால் அதற்கு பிறகு அமைந்த அரசு, இந்த விவகாரத்தில் போதிய கவனம் செலுத்தவில்லை என்பது பெரும் வேதனை. கர்நாடக அரசின் திட்டங்களால் தென் பெண்ணை ஆற்றை நம்பி உள்ள கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்டங்களின் விவசாயத் தேவைக்கும், குடிப்பதற்கும் எதிர்காலத்தில் சொட்டு நீர்கூட கிடைக்காத அவலம் நிகழும்.

மேலும் தென் பெண்ணை ஆற்றில் உள்ள ஓசூர், கெலவரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணை ஆகியவை வறண்டு போகும் அபாயமும் ஏற்படும். தென் பெண்ணை ஆற்றில் நீர் இல்லாமல் போனால் விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும். விவசாயத்துக்கும், குடிநீருக்கும் மக்கள் பரிதவிக்கும் நிலைமை உருவாகும். இவ்வாறு தென்பெண்ணை பாசன விவசாயிகள் கூறினர்.

படிப்படியாக குறையும் நீர்வரத்து
கர்நாடக மாநிலத்தில், நந்தி ஹில்ஸ் மலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆற்று நீர், தமிழகத்தின், ஓசூர் அருகே, கெலவரப்பள்ளி அணையில் தேக்கி வைக்கப்படுகிறது. இந்த தண்ணீர், ஓசூர் தாலுகாவில் உள்ள, 8,000 ஏக்கர் விவசாய பாசனத்திற்கும், ஓசூர் நகராட்சி குடிநீர் தேவை மற்றும் சிப்காட் தொழிற்பேட்டை குடிநீர் தேவைக்கும், ஆண்டு முழுவதும் பயன்படுத்தப்படுகிறது. 2ஆண்டுகளுக்கு முன்பிருந்து கர்நாடக மாநில அரசு, முகளூர் தத்தனூரில், ஜெனரேட்டர் மோட்டார் மூலம், 24 மணி நேரமும் தண்ணீரை உறிஞ்சி, அங்கு கட்டப்பட்டுள்ள, 40 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட, தரைமட்ட தொட்டியில் தேக்கி வருகிறது. அங்கிருந்து, 16 கி.மீ., தொலைவில் உள்ள, 150 ஏக்கர் ஏரிக்கு, கால்வாய் மூலம், விவசாய பாசனத்துக்கு தண்ணீர் கொண்டு சென்றது. இதனால் தமிழகத்துக்கு வரும் தென்பெண்ணை ஆற்றின் நீர் வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.



Tags : paddy fields ,rivers ,state ,farmland , Tenpennai negligence karnatakattirku six, TN, farmland, farmers
× RELATED தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர்...