×

மகாராஷ்டிராவில் பாஜவின் அரசியல் தில்லுமுல்லு ஜனநாயகத்தை காலில்போட்டு மிதிப்பதா?: தமிழக தலைவர்கள் கடும் கண்டனம்

சென்னை: மகாராஷ்டிராவில் பாஜவின் அரசியல் தில்லுமுல்லு செய்து ஜனநாயகத்தை காலில்போட்டு மிதிப்பதா? என்று தமிழக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கே.எஸ்.அழகிரி (தமிழக காங்கிரஸ் தலைவர்):  தேசியவாத காங்கிரசை பாஜ உடைத்திருக்கிறது. ஒரு குடும்பத்திற்குள் நுழைந்து அரசியல் செய்து அதன் மூலம் தனது அதிகார பசியை பாஜ போக்கிக் கொள்வதோடு கோர முகத்தை காட்டியுள்ளது. சரத்பவாரின் முதுகில் குத்தப்பட்டுள்ள கறை அவரை விட்டு அகலாது.
கே.பாலகிருஷ்ணன்(சிபிஎம் மாநில செயலாளர்): பாஜக  அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு மிக கீழ்த்தரமான, நெறியற்ற நடவடிக்கைகள்  எதையும் மேற்கொள்ளக் கூடிய கட்சி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. அனைத்து ஜனநாயக நடைமுறைகளையும், சட்டவிதிகளையும் காலில் போட்டு மிதித்து  பாஜ செயல்பட்டுள்ளது. மிக கேவலமாக பாஜக திரைமறைவு, தில்லுமுல்லுகளை மகாராஷ்டிரா அரசியலில் அரங்கேற்றியுள்ளது.

இந்திய ஜனநாயகத்தில் கருப்புப்  புள்ளியாக பாஜக நிகழ்த்தியுள்ள இந்த சட்டவிரோதமான நடவடிக்கையை வன்மையாக  கண்டிக்கிறோம். திருமாவளவன் (விசிக தலைவர்): மதவாதத்தை  எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டிருந்த என்.சி.பி.ஐ கட்சி  பாஜவோடு கூட்டணி அமைத்துள்ளது. கூட்டணி அமைத்தது அந்த இரு கட்சிகளின் தனிப்பட்ட நிலைப்பாடு என்றாலும் கூட, இது இந்திய அரசியல் அமைப்பு, ஜனநாயகம் மீதுள்ள நம்பகத்தன்மையை பாதித்துள்ளது. நெல்லை முபாரக்(எஸ்.டி.பி.ஐ.கட்சி தலைவர்): தேசியவாத  காங்கிரஸ் கட்சியை உடைத்து, ஜனநாயக நெறிமுறைகளுக்கு மாறாக பாஜக  ஆட்சியமைத்துள்ளது. பாஜகவின் இந்த சந்தர்ப்பவாத குதிரைபேர அரசியல்  வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஆட்சியைக் கைப்பற்ற எத்தகைய இழிவான  ஆட்டத்தையும் ஆடுவதற்கு பாஜக தயாராகவே உள்ளது என்பது கோவா, மணிப்பூர், கர்நாடகாவை தொடர்ந்து தற்போது மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக  ஆட்சியைப் பிடித்தவிதம் உணர்த்துகின்றது. பாஜக தனது அதிகார வெறிக்காக  நாட்டின் ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்குகிறது.

இந்திய ஜனநாயகத்தின் முகத்தில் கரி பூசப்பட்டுள்ளது : மு.க.ஸ்டாலின் கருத்து
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்துள்ள அரசியல் ரீதியான அருவெறுப்பை, அநாகரிகம் என்பதா, அசிங்கம் என்பதா, எதனோடு ஒப்பிடுவது.‘ஜனநாயகப் படுகொலை’’ என்று சொல்வதுகூடச் சாதாரணமான சொல்லாகிவிடுமோ -நடந்திருப்பதின் கடுமையைக் குறைத்துவிட்டதாகி விடுமோ, என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. அரசியல் சட்ட நெறிமுறைகளையே காலில் போட்டு மிதித்துக் குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு, மாநில ஆளுநரைத் தலையாட்டி பொம்மையாக்கி, குடியரசுத் தலைவர் மாளிகை மூலமாகவும் இறுதியில் மறைமுக மிரட்டல்கள் மூலமாகவும், ஆட்சியில் உட்கார்ந்திருப்பதை என்ன பாணி அரசியல் என்பது பாஜக சித்து விளையாட்டு என்பதா இந்திய ஜனநாயகத்தின் முகத்தில் கரி பூசப்பட்டுள்ளது. இது மாபெரும் வெட்கக் கேடு மாறாத தலைகுனிவு.

Tags : BJP ,Maharashtra ,leaders ,Baja , Baja's Politics , Maharashtra, Tamil leaders
× RELATED தேர்தல் பிரசாரத்தில் மயங்கி விழுந்தார் நிதின் கட்கரி