×

முதல்கட்டமாக 38 இடங்களில் வாகன நிறுத்தத்துடன் வணிக வளாகம்

* சென்னை மாநகராட்சி முடிவு
* 50 ஆயிரம் கார்களை நிறுத்தலாம்

சென்னை: ஒருங்கிணைந்த வாகன நிறுத்த மேலாண்மை திட்டத்தின்படி சென்னையில் 38 இடங்களில் வணிக வளாகத்துடன் கூடிய வாகன நிறுத்தங்களை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், வாகன நிறுத்த வசதிகளை அதிகரிக்கவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தபட்டு வருகிறது. சென்னை தி.நகரில், உத்தமர் காந்தி சாலை உள்ளிட்ட இடங்களில் பல் அடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதேபோல், ஸ்மார்ட் சிட்டி நிதி மூலம் ஸ்மார்ட் பார்க்கிங் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. சாலையின் ஓரங்களில் உள்ள இடங்களை கண்டறிந்து வாகனங்களை நிறுத்துவதற்கான வசதியை ேமம்படுத்துவது இதன் நோக்கமாகும்.இதற்கிடையில், சென்னை மாநகராட்சியில் பொதுமக்கள் மற்றும் தனியார் பங்களிப்புடன் ₹2 ஆயிரம் கோடி செலவில் விரிவான ஒருங்கிணைந்த வாகன நிறுத்த மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும் என்று 2019-20ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இதன்படி 2 லட்சம் இருசக்கர வாகனங்கள், 2 லட்சம் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தக்கூடிய வகையில் நிலத்தடி வாகன நிறுத்தங்கள் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதை தொடர்ந்து வாகன நிறுத்தங்களை அமைப்பதற்கான இடங்களை கண்டறிய வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டார். அதன்படி சிறப்பு திட்டங்கள் துறையின் தலைமை பொறியாளர் நந்தக்குமார், பொறியாளர்கள், வருவாய் அலுவலர்கள், ஸ்மார்ட் சிட்டி அதிகாரிகள் அடங்கிய குழு சென்னை முழுவதும் ஆய்வு செய்து 80  இடங்களை கண்டறிந்தனர்.இவற்றில் முதல்கட்டமாக 38 இடங்களில் வணிக வளாகத்துடன் கூடிய  பல் அடுக்கு வாகன நிறுத்தம் அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:ஒருங்கிணைந்த வாகன நிறுத்த மேலாண்மை திட்டத்தின்படி 38 இடங்களில் வணிக வளாகத்துடன் கூடிய பல் அடுக்கு வாகன நிறுத்தம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து அதிகம் உள்ள இடங்கள், மெட்ரோ ரயில் மற்றும் புறநகர் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், சைக்கிள் ஷேரிங் அதிகம் பயன்படுத்தப்படும் இடங்களில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வணிக வளாகங்களில் உணவகங்கள், மருத்துவமனைகள், விளையாட்டு அரங்குகள் ஆகியவையும் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இந்த இடங்களில் 50 ஆயிரம் கார்களை நிறுத்துவதற்கான வசதியை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான சாத்திய கூறு அறிக்கை தயாரிக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

65 லட்சம் வாகனங்கள்  
சென்னையில் 11 லட்சத்து 20 ஆயிரம் நான்கு சக்கர வாகனங்களும், 54 லட்சம் இரு சக்கர வாகனங்களும் உள்ளன. இந்த எண்ணிக்கையை கணக்கில் கொண்டு சென்னையில் வாகன நிறுத்தங்களை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

Tags : shopping complex ,parking spaces , Shopping, complex ,parking
× RELATED டெல்லியில் ரூ.477 கோடியில்...