×

நள்ளிரவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து மகாராஷ்டிராவில் பாஜ தடாலடி ஆட்சி

* அதிகாலையில் ஜனாதிபதி ஆட்சி திடீர் ரத்து
* பவார் உறவினர் அஜித் பவார் துணை முதல்வர்
* காலை 8 மணிக்கு முதல்வராக பட்நவிஸ் பதவியேற்பு
* ஆட்சியை அகற்ற சிவசேனா, காங்., தே.காங். வழக்கு

மும்பை: மகாராஷ்டிராவில் அதிரடி அரசியல் திருப்பமாக, தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து, மகாராஷ்டிராவில் பாஜ தடாலடியாக ஆட்சி அமைத்தது. இதற்காக அதிகாலை 5.47 மணிக்கு அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி ரத்து செய்யப்பட்டு, பாஜ.வைச் சேர்ந்த தேவேந்திர பட்நவிஸ் முதல்வராக இரண்டாவது முறையாக பதவியேற்றுக் கொண்டார். தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார். இதை எதிர்த்து சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளன. 288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு கடந்த அக்டோபர் 21ம் தேதி நடைபெற்ற தேர்தலில் பாஜவும் சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்த கூட்டணி 161 இடங்களில் வெற்றி ெபற்று பெரும்பான்மை பலத்தை பெற்றது. இருந்தாலும் முதல்வர் பதவி பிரச்னை காரணமாக மோதல் ஏற்பட்டு ஆட்சி அமைக்க முடியாமல் போனது. தேர்தலில் 54 இடங்களில் வெற்றி பெற்றிருந்த தேசியவாத காங்கிரஸ் மற்றும் 44 இடங்களை பிடித்த காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க சிவசேனா தீவிர முயற்சி மேற்கொண்டது. இதற்கான குறைந்தபட்ச செயல் திட்டத்தை மூன்று கட்சிகளும் சேர்ந்து உருவாக்கின. புதிய அரசு அமைப்பதற்கான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியிருந்தன. உத்தவ் தாக்கரே மாநிலத்தின் முதல்வர் ஆவார் என்று நேற்று முன்தினம் இரவு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறியிருந்தார். சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் நேற்று ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரவும் முடிவு செய்திருந்தனர்.

இந்த நிலையில் மாநில அரசியலில் யாரும் எதிர்பாராத அதிரடி திருப்பம் நேற்று காலை ஏற்பட்டது. தேவேந்திர பட்நவிஸ் மீண்டும் முதல்வர் ஆனார். தேசிய வாத காங்கிரசின் தலைவர் பவாரின் உறவினர் அஜித் பவார் துணை முதல்வரானார். அவர்களுக்கு கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். ராஜ்பவனில் நடந்த பதவியேற்பு விழாவில் பாஜவை சேர்ந்த ஒரு சில தலைவர்களும், தேசியவாத காங்கிரசை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்களும் மட்டுமே கலந்து கொண்டனர். நேற்று முன்தினம் இரவு சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் சந்தித்து பேசியதை தொடர்ந்து இந்த மூன்று கட்சி கூட்டணி மாநிலத்தில் ஆட்சியமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதன்பிறகுதான் பாஜ அதிரடியாக காய்களை நகர்த்தி அஜித் பவாரை வளைத்து போட்டது. கடந்த சில நாட்களாகவே பாஜவை சேர்ந்த மூத்த தலைவர்கள் சிலர் அஜித் பவாருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்துள்ளனர்.இந்த நிலையில், கட்சி எம்.எல்.ஏ.க்கள் 54 பேரும் கையெழுத்து போட்ட கடிதம் அஜித் பவாரிடம் இருப்பது பாஜவை சேர்ந்த சில மூத்த தலைவர்களுக்கு தெரிய வரவே அவர்கள் உடனடியாக நேற்று முன்தினம் நள்ளிரவில் அஜித் பவாரை தொடர்பு கொண்டு அவசரமாக பேசி அவரை சம்மதிக்க வைத்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜ தேசியத் தலைவர் அமித்ஷாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து டெல்லியில் இருந்து கவர்னருக்கு சில யோசனைகள் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து அதிகாலை 5.47க்கு ஜனாதிபதி ஆட்சி ரத்து செய்யப்பட்டது. அடுத்த கணமே,  தேவேந்திர பட்நவிஸ் மற்றும் அஜித் பவார் பதவியேற்பதற்கான ஏற்பாடுகளை கவர்னர் மாளிகை அவசர அவசரமாக செய்து முடித்தது.இதைத் தொடர்ந்து நேற்றுக் காலை 8.05 மணிக்கு கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் தேவேந்திர பட்நவிசும் அஜித் பவாரும் பதவியேற்றுக் கொண்டனர். இந்த தகவல் பாஜவை சேர்ந்த சில குறிப்பிட்ட மூத்த தலைவர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. தேசியவாத காங்கிரசிலும் அஜித் பவாருக்கு மிக வேண்டப்பட்டவர்களாக கருதப்பட்ட மூன்று எம்.எல்.ஏ.க்களுக்குத்தான் நேற்று காலை 6 மணியளவில் பதவியேற்பு பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் ராஜ்பவனுக்கு வரவழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  கடந்த 2014 தேர்தலில் வெற்றி பெற்று தேவேந்திர பட்நவிஸ் முதன் முறையாக முதல்வர் பதவியேற்றபோது அதற்கான விழா பாஜவின் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் முன்னிலையில் மும்பையில் உள்ள வாங்கடே ஸ்டேடியத்தில் நடந்தது. ஆனால் நேற்றைய பதவியேற்பு “ரகசியமாக நடந்தது” என்று சிலர் குற்றம்சாட்டுகின்றனர்.

பாஜவுக்கு ஆதரவு அளிக்க அஜித் பவார் முடிவு செய்தது அவருடைய சொந்த முடிவு என்றும் கட்சியின் முடிவு அல்ல என்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறியிருக்கிறார்.  மாநிலத்தில் பாஜ அல்லாத ஒரு அரசை அமைக்க தேசியவாத காங்கிரஸ் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்த நிலையில் அந்த கட்சியை பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் சாடியிருந்தார். இந்த சூழ்நிலையில் மகாராஷ்டிராவில் இந்த அரசியல் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சரத் பவார் சமீபத்தில் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்ததும் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. பாஜவையும் தேசியவாத காங்கிரசையும் ஒன்று சேர்க்க பெரிய தொழிலதிபர் ஒருவர் காய் நகர்த்தி வருவதாகவும் பேச்சு அடிபட்டது. பிரதமர் மோடி எப்போதுமே சரத் பவாரை பாராட்டியே வந்திருக்கிறார். சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின்போது கூட சரத் பவாருக்கு எதிராக அவர் பேசவில்லை.

மாநிலங்களவையின் 250வது கூட்டத் தொடரையொட்டி பேசிய பிரதமர் மோடி, நாடாளுமன்ற நடைமுறைகளை பின்பற்றுவது குறித்து ேதசியவாத காங்கிரஸ் மற்றும் பிஜூ ஜனதா தளத்திடம் இருந்து பாஜ உள்ளிட்ட அரசியல் கட்சிகள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.  மகாராஷ்டிராவில் பாஜ தடாலடியாக ரகசியமாக ஆட்சியை அமைத்ததற்கு எதிராக காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.  அதில், பா.ஜ அரசு 24 மணி நேரத்துக்குள் பெரும்பாண்மையை நிருபிக்க உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

கட்சி தாவல் தடை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முடியுமா?
மகாராஷ்டிராவில் எப்போது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என்பது குறித்து சட்ட நிபுணரான மூத்த வக்கீல் ராகேஷ் திவேதில் அளித்த விளக்கம் வருமாறு:
* ஆட்சி அமைக்கும்போது கட்சித் தாவல் தடை சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது.
* மகாராஷ்டிராவில் ஏற்கனவே எம்எல்ஏ.க்கள், எம்பி.க்கள் முன்னிலையில் புதிய அரசு பதவியேற்று விட்டதால், சட்டப்பேரவையில்  பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வருக்கு, கவர்னர் அழைப்பு விடுக்க வேண்டும்.
* முதல்வர் தனது பெரும்பான்மையை நிரூபித்தால், இடைக்கால சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட்டு எம்எல்ஏ.க்கள் பதவியேற்பார்கள்.
* பிறகு, சபாநாயகர் தேர்தல் நடந்து முறைப்படி சபாநாயகர் தேர்வு செய்யப்படுவார். அவரிடம் கட்சி தாவல் புகார் மனு கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படலாம்.
* அதேநேரம், கட்சி பிளவுபடும்போது மூன்றில் 2 பங்கு ஆதரவு இருந்தால், அவர்களை கட்சித் தாவல் தடை சட்டத்தின் மூலம் தகுதி நீக்கம் செய்ய முடியாது.
* அஜித் பவார் தேசியவாத காங்கிரசில் மூன்றில் 2 பங்கு எம்எல்ஏ.க்கள் ஆதரவை பெற்றால் மட்டுமே, ஆட்சியில் வலுவாக அமர முடியும். இல்லை என்றால், பதவியை இழப்பார்.இவ்வாறு அவர் கூறினார்.

அஜித் பவார் யார்?
பாஜ கூட்டணி அரசில் துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள அஜித் பவார் தேசியவாத காங்கிரசின் தலைவர் சரத் பவாரின் அண்ணன் ஆனந்த்ராவ் பவாரின் மகன். கடந்த 1982ம் ஆண்டில் தனது 20வது வயதில் அரசியலில் நுழைந்தார். 1991ம் ஆண்டு புனே மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவராக ெபாறுப்பேற்ற அவர் 16 ஆண்டுகள் அந்த பதவியில் நீடித்தார். தொடர்ந்து, பாரமதி தொகுதி மக்களவை உறுப்பினரானார். நரசிம்மராவ் ஆட்சியில் தனது சித்தப்பா சரத் பவார் பாதுகாப்புத் துறை அமைச்சராக பொறுப்பேற்றபோது. அவர் எம்பி ஆவதற்கு வசதியாக தனது எம்பி பதவியை ராஜினாமா செய்தார்.

கடந்த, 1995ல்  தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ.வாக பாரமதி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 2014 வரை தொடர்ந்து 5 முறை எம்எல்ஏ.வாக நீடித்தார். 1999ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்தபோது நீர்ப்பாசனத் துறை அமைச்சராக பதவி வகித்தார். பின்பு, 2004ல் இந்த கூட்டணி மீண்டும் ஆட்சி அமைத்தபோது அதே துறையில் அமைச்சராக பொறுப்பேற்றார். துணை முதல்வராக கடந்த 2012 செப்டம்பர் 29 முதல்  2014ம் ஆண்டு செப்டம்பர் 25 வரை பதவி வகித்தார். தேசியவாத காங்கிரஸ் தொண்டர்கள் இவரை தாதா (அண்ணன்) என அன்போடு அழைத்து வருகின்றனர். இவர்தான், சரத் பவாரின் அரசியல் வாரிசாகவும் கருதப்பட்டார்.

அதிகாலை 5.47க்கு ஜனாதிபதி ஆட்சி ரத்து
டெல்லியில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவுக்கு பின்னர் ஆளுநர் மாளிகைக்கு வந்த ஒரு தகவலை தொடர்ந்து, மகாராஷ்டிராவில் அமல்படுத்தப்பட்டிருந்த ஜனாதிபதி ஆட்சி விலக்கிக் கொள்ளப்படுவதாக அதிகாலை 5.47 மணிக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து அறிவிப்பு வெளியானது. அதன் பிறகுதான் பதவியேற்புக்கான ஏற்பாடுகள் அவசர அவசரமாக செய்யப்பட்டது. ஆனால், ஜனாதிபதி ஆட்சி ரத்து செய்யப்பட்ட தகவல், தேவேந்திர பட்நவிஸ் பதவியேற்பு விழா ஆகியவை, இவையெல்லாம் நடந்து முடிந்த பின்னர் காலை 8 மணிக்கு பின்னர்தான் வெளியே தெரிந்தது. அதுவரை எல்லாமே ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது.

Tags : Baja Talatali ,Maharashtra ,Nationalist Congress Party ,Congress ,Baja Tata Dalit , =Nationalist Congress party ,broke up, Maharashtra
× RELATED மனைவியை ஆதரித்து அஜித் பவார் பிரசாரம்:...