மராட்டிய அரசியலில் திடீர் திருப்பம்; முதல்வராக பதவியேற்றார் தேவேந்திர பட்னாவிஸ்; அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்பு

மும்பை: மராட்டிய மாநில முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றுக் கொண்டார். தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். இவர்களுக்கு மராட்டிய ஆளுநர் பகத்சிங் கோஷாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார். மராட்டியத்தில் பல நாட்களாக ஆட்சியமைப்பதில் குழப்பம் நீடித்து வந்த நிலைவயில் தேசியவாத காங்கிஸ் கட்சியுடன் பாஜக கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்துள்ளது. மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பா.ஜனதா 105, சிவசேனா 56 இடங்களில் வெற்றி பெற்றன.

ஆட்சியமைக்க இந்த கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்த போதிலும், முதல்வர் பதவி தொடர்பான மோதல் காரணமாக பா.ஜனதா உடனான கூட்டணியை சிவசேனா முறித்துக் கொண்டதால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்தது. இந்நிலையில், முந்தைய சட்டப்பேரவையின் ஆயுட்காலம் முடிவுக்கு வந்ததால் கடந்த 12ம் தேதியன்று மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பாஜவை ஒதுக்கி விட்டு, 54 இடங்களில் வெற்றி பெற்ற தேசியவாத காங்கிரஸ் மற்றும் 44 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரசுடன் புதிய கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க சிவசேனா தீவிர முயற்சிகளை மேற்கொண்டது.

பல கட்ட பேச்சுகள் நடந்தன. நேற்று மாலை தென் மும்பையில் உள்ள நேரு சென்டர் அரங்கில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கூட்டணி இறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது. முதல்வர் பதவியை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேக்கு விட்டுக்கொடுக்க காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் சம்மதித்தாகவும், முதல்வராக உத்தவ் தாக்கரே பெயரை சரத் பவார் பரிந்துரைத்தார் என்றும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் திடீர் திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் பாஜக கூட்டணி அமைத்து ஆட்சியை அமைத்துள்ளது. மராட்டிய மாநில முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றுக் கொண்டார்.

Related Stories: