×

கோவையில் இருந்து சென்னை வந்த விமானம் நடுவானில் தீப்பிடித்தது: 174 பயணிகள் தப்பினர்

சென்னை: கோவையில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று காலை 10.05 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டது. அதில் 169 பயணிகள், 5 விமான சிப்பந்திகள் இருந்தனர். இந்த விமானம், நேற்று பகல் 11.05 மணிக்கு சென்னையில் தரை இறங்க வேண்டும். 10.30 மணியளவில் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென வால் பகுதியான சரக்கு பார்சல்கள் வைக்கும் கார்கோ பகுதியில் இருந்து புகை வந்தது.  இது விமானிக்கு தெரியவந்தது. உடனே, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து, அவசரமாக தரையிறங்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஓடுபாதையை சுற்றிலும் தீயணைப்பு வண்டிகள், மருத்துவ  குழுவினர், அதிரடிப்படை தயார் நிலையில் நிறுத்தப்பட்டனர். அவசர கால முன்னுரிமை அடிப்படையில் 18 நிமிடங்கள் முன்னதாக 10.47 மணிக்கு விமானம் சென்னையில் தரை இறங்கியது. அதற்கு பிறகே பயணிகள் நிம்மதியடைந்தனர்.  விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டு பயணிகள் கீழே பத்திரமாக இறக்கப்பட்டனர். இதையடுத்து, தொழில்நுட்ப குழுவினர், விமானத்துக்குள் ஏறி, சரக்கு பார்சலில் ஆய்வு செய்தனர். புகை வந்ததற்கான அறிகுறி தெரியவில்லை. தொழில்நுட்ப கோளாறு என்பது தெரிந்தது.இந்த விமானம் சென்னையில் இருந்து மீண்டும் பகல் 1 மணிக்கு டெல்லி புறப்பட வேண்டும். கோளாறு காரணமாக இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. அதிகாரிகள், விமானத்தை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் டெல்லியில் உயர்  அதிகாரிகள் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மற்றொரு விமானம் கோளாறு
சென்னையில் இருந்து பாங்காக் செல்லும் தாய் ஏர்லைன்ஸ் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட தயாரானது. விமானத்தில் 268 பயணிகள், 9 விமான ஊழியர்கள் என மொத்தம் 277 பேர் இருந்தனர். ஓடுபாதையில் ஓட தொடங்கியபோது,  விமானத்தில் இயந்திரக்கோளாறு இருந்ததை விமானி கண்டுபிடித்தார். விமானத்தை நிறுத்தி உடனே சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து, இழுவை வண்டிகள் மூலம் புறப்பட்ட இடத்தில் விமானம் நிறுத்தப்பட்டது. விமான நிலைய பொறியாளர் குழுவினர், விமானத்துக்குள் ஏறி பழுதுபார்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்கான உதிரி பாகங்கள் தாய்லாந்து நாட்டில்  இருந்துதான் கொண்டு வரவேண்டி இருந்தது. தாய்லாந்தில் இருந்து வரும் மற்றொரு பயணிகள் விமானத்தில் கொண்டு வரப்பட்டு உதிரிபாகங்கள் பொருத்திய பின்பே விமானம் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பிறகு விமானம் ரத்து  செய்யப்பட்டது. இதையடுத்து, பயணிகள் கீழே இறக்கப்பட்டு சென்னை நகரில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் தங்கவைக்கப்பட்டனர். விமானத்தில் ஏற்பட இயந்திரக்கோளாறு தகுந்த நேரத்தில் கண்டறியப்பட்டதால் 277 பேர் அதிர்ஷ்டவசமாக  உயிர் தப்பினர்.

Tags : passengers ,flight ,Coimbatore ,Chennai ,Chennai Airplane , Chennai, Airplane , fire
× RELATED டெல்லியில் இருந்து ஹஜ் பயணிகளின்...