×

கொள்ளையடித்த வாலிபர்களை பிடித்து வைத்து சாலை மறியல் போலீசார் நடத்திய கண்மூடித்தனமான தடியடியில் பொதுமக்கள் படுகாயம்: கூடுவாஞ்சேரி அருகே பதற்றம்

சென்னை: வீடுகளில் பூட்டை  உடைத்து கொள்ளையடித்த 2 வாலிபர்களை பிடித்து  பொதுமக்கள் சரமாரியாக தர்மஅடி  கொடுத்தனர். அந்த வாலிபர்களை மீட்டு கைது செய்ய வந்த போலீசார், பொதுமக்களை  கலைக்க தடியடி நடத்தினர்.   இதனால், அப்பகுதியே போர்க்களம் போல காணப்பட்டது. சென்னை கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கம், வள்ளலார் நகரில் கடந்த 6 மாதங்களாக தொடர் வழிப்பறி, செயின் பறிப்பு, வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை, கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து  வந்தது.  இந்நிலையில், நேற்று முன்தினம் மாடம்பாக்கம் வள்ளலார் நகர், காயிதேமில்லத் தெருவை சேர்ந்த அப்துல் அலீம் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து 24 சவரன் நகை மற்றும்  62ஆயிரம் பணம் கொள்ளை போனது. இச்சம்பவத்தையடுத்து, நேற்று காலை அதே பகுதியில் ஒருவரது வீட்டின் சுவற்றில் எகிறி குதித்த மாடம்பாக்கம் பொன்னியம்மன் கோயில் தெருவை சேர்ந்த மோகன்ராஜ் (18), மாடம்பாக்கம், வள்ளலார் நகர் பிரதான சாலையை சேர்ந்த  இம்ரான் (18) என்ற 2 வாலிபர்களை அப்பகுதி பொதுமக்கள் கையும், களவுமாக பிடித்து வைத்து சரமாரியாக அடித்து உதைத்து விசாரித்தனர். அப்போது ஏரிக்கரை, காடு, மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பதும், 6 மாதங்களாக தொடர் வழிப்பறி, செயின் பறிப்பு, வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளையடித்ததாகவும் இருவரும்ஒப்புகொண்டனர். பின்னர், அவர்கள் வைத்திருந்த கஞ்சா பொட்டலங்களை பொதுமக்கள் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால், 5 மணி நேரமாகியும் போலீசார் வராததால்  ஆத்திரமடைந்த பொதுமக்கள் பிடிபட்ட வாலிபரின் வீட்டை சூறையாடினர்.

பின்னர், காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100க்கு தகவல் கொடுத்தனர். இதுகுறித்து கேள்விப்பட்டதும் மேலும் 300க்கும் மேற்பட்ட மக்கள் அப்பகுதிக்கு திரண்டு வந்தனர். பின்னர், நகை மற்றும் பணத்தை பறிகொடுத்தவர்கள் மற்றும் அப்பகுதி  பொதுமக்கள் கையும், களவுமாக பிடிபட்ட இருவரையும் சரமாரியாக தாக்கினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் 4 மணியளவில் வந்த கூடுவாஞ்சேரி போலீசார் பொதுமக்கள் பிடித்து வைத்த 2 வாலிபர்களையும் மீட்டனர். அப்போது, பொதுமக்கள் போலீசாரிடம் கூறுகையில், ‘கடந்த 6 மாதங்களாக பிடிபட்ட 2 பேர் உட்பட 10 பேர் கொண்ட கும்பல் கஞ்சா விற்பனை செய்வதும், செயின் பறிப்பு, வழிப்பறி, வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கும்  சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதில், அவர்கள் மீது கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதுகுறித்து தாங்களும் அவ்வப்போது பிடித்து சென்று கைது செய்கிறீர்கள். ஆனாலும், சிறை சென்றுவிட்டு வெளியே வந்ததும் இதே தொழிலில்தான் மீண்டும், மீண்டும் ஈடுபடுகின்றனர். இனிமேல் அவர்களை வெளியில் விட்டுவிட்டால்  எங்களின் உயிருக்கு ஆபத்து நேரிடும். எனவே, எங்களுக்கு உத்தரவாதம் கொடுத்துவிட்டு அவர்களை அழைத்து செல்லுங்கள் என்று கூறி பொதுமக்கள் ஒரு மணி நேரமாக சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் எவ்வளவே எடுத்து கூறியும்  பொதுமக்கள் சாலை மறியலை கைவிடவில்ைல.

இதனையடுத்து வந்த கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், எஸ்.ஐ வெங்கடேசன் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட போலீசார் மறியலில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் மீது தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.  பின்னர், பிடிபட்ட 2 பேரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதில், போலீசார் நடத்திய தடியடியில் 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இச்சம்பவத்தால் மாடம்பாக்கத்தில் நேற்று பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது.

ஆண் போலீஸ் பெண்களை தாக்குவதா?
பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தாமல், பெண்கள் என்றும் பார்க்காமல் கண்மூடித்தனமாக போலீசார் தடியடி நடத்தியதாக சொல்லி பெண்கள் கதறி அழுதனர். இது அப்பட்டமான மனித உரிமை மீறல். பிடிபட்ட 2 பேரையும் வெளியே  விடாமல் குண்டர் சட்டத்தில் அடைப்போம் என்று உத்தரவாதம் கொடுத்துவிட்டு அழைத்து செல்லுங்கள் என்றுதான் கேட்டோம். ஆனால், ஒரு மணி நேரம் கழித்து வந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தாமல் கஞ்சா விற்பனை  மற்றும் கொள்ளையடிப்பவர்களை கையும், களவுமாக பிடித்து கொடுத்ததால் ஆத்திரமடைந்த போலீசார் மாத மாமூல் போகிறதே என்று ஈவு இரக்கமின்றி இளம்பெண்கள், வயதான பெண்கள், நடந்த சம்பவங்களை வீடியோ எடுத்தவர்கள் மற்றும்  வேடிக்கை பார்த்துகொண்டிருந்த அப்பாவி பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக போலீசார் தடியடி நடத்தினர். பின்னர், இதனை செல்போன்களில் வீடியோ எடுத்த காரணத்துக்காக பலரது செல்போனை போலீசார் பிடுங்கி சென்றனர். மேலும்,  உளவுத்துறை, கிரைம் போலீசாரும் கூடுவாஞ்சேரி போலீசாருடன் சேர்ந்து தடியடி நடத்திய கொடூரம் அனைவரையும் அதிரவைத்தது.

Tags : road ,tragedy ,Guduvancheri ,Pick , road ,catch , looted youth, Guduvancheri
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி