×

கொடைக்கானலுக்கு செல்பவர்களை குறி வைக்கும் ‘குழி கொள்ளையர்கள்: தொடர் சம்பவங்களால் சுற்றுலாப்பயணிகள் பீதி

வத்தலக்குண்டு: கொடைக்கானலுக்கு வாகனங்களில் சுற்றுலா செல்பவர்களை குறி வைத்து, கொள்ளை அடிக்கும் மர்ம நபர்களால் சுற்றுலாப்பயணிகள் அச்சம் அடைகின்றனர். இரவு நேரத்தில் நடக்கும் இக்கொள்ளை சம்பவத்தை போலீசார் கண்காணித்து தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலையில் மின்விளக்குகள் அமைக்க வேண்டுமென சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ‘மலைகளின் இளவரசி’ என அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு வார இறுதி, பண்டிகை காலங்கள் மற்றும் சீசன் காலங்களில் சுற்றுலாப்பயணிகள் அதிகளவு செல்வதுண்டு. தங்குமிடம், வாகன செலவு, பொருட்கள், சுற்றுலா தலங்களில் செலவு என பெரும்பாலும் சுற்றுலா செல்பவர்கள் கூடுதல் தொகைகளை எடுத்து செல்வதுண்டு. வெளியூர் பயணம் என்பதால் பெண்கள் நகைகளையும் அதிகளவு அணிந்து செல்வார்கள். இவர்களை குறி வைத்து கொள்ளை சம்பவங்கள் வத்தலக்குண்டு பகுதியில் தொடர்ந்து நடந்து வருகிறது.

எப்படி நடக்கிறது என்பதை பார்ப்போமா?

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு மதுரை, திண்டுக்கல், தேனி, கொடைக்கானல் போன்ற முக்கிய நகரங்களுக்கு இடையே மையமாக அமைந்துள்ளது.  வேகமாக வளர்ந்து வரும் நகரமான வத்தலக்குண்டு வழியாகத்தான் அதிகளவு சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானலுக்கு சென்று வருகின்றனர். மேலும், இங்கு உணவு சாப்பிட்டு விட்டு மலையேறுவது சுற்றுலாப்பயணிகளின் வழக்கமாக உள்ளது. இதனால் வத்தலக்குண்டுவில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகளவு இருக்கும். இவ்வழியே செல்லும் அமைச்சர்கள் முன்னதாகவே காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு போக்குவரத்தை சீர்செய்து செல்வது வழக்கம். ஆம்புலன்ஸ் போன்ற அவசர வாகனங்கள் கூட அடிக்கடி போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்வது வாடிக்கையாக உள்ளது. கடந்த 5 வருடங்களுக்கு முன்பு வத்தலக்குண்டு நகர் பகுதிக்கு போக்குவரத்து காவல்துறை தனியே அமைக்கப்பட்டது. அதன் பிறகும் போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியவில்லை. ஆகையால் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு வத்தலக்குண்டு - திண்டுக்கல் சாலையில் அய்யம்பாளையம் பிரிவு என்ற இடத்திலிருந்து தங்கமலையின் பின்புறத்தை குடைந்து, கணவாய்பட்டி ஊராட்சி பகுதியை கடந்து பெரியகுளம் சாலையில் உள்ள துணை மின்நிலையம் வரை 6 கி.மீ தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

மின்விளக்குகள் இல்லை:

அதைத்தொடர்ந்து திண்டுக்கல் சாலையில் லெட்சுமிபுரம் அருகே சுங்கச்சாவடியும் அமைத்தனர். ஆனால் இங்கு மிக முக்கிய தேவையான மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் வத்தலக்குண்டு நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலுக்கு பயந்து புறவழிச்சாலையில் செல்லும் சுற்றுலாப்பயணிகள் உள்பட அனைத்து பயணிகளும் இரவு நேரங்களில் புறவழிச்சாலையில் செல்ல அச்சமடைகின்றனர். அதே நேரம் செல்லும் சுற்றுலாப்பயணிகளை மிரட்டி கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

குழியில் பதுங்கி கொள்ளை :

புறவழிச்சாலையில் கொள்ளையர்கள் பதுங்குவதற்கு வசதியாக பதுங்கு குழிகள் ஏராளமாக உள்ளன. இங்கு கொள்ளையர்கள் பதுங்கிக்கொண்டு வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு நேரங்களில் புறவழிச்சாலையில் மின்விளக்குகள் இல்லாததால், இருண்டு காணப்படுவது கொள்ளையர்களுக்கு வசதியாக மாறி விடுகிறது. இவர்கள் சுற்றுலாப்பயணிகளின் வாகனங்களை மறித்து நகை, பணத்தை கொள்ளையடித்து செல்கின்றனர். இதனால்  இரவு நேரங்களில் ெகாள்ளையர்களுக்கு பயந்து பலர், வத்தலக்குண்டு நகருக்குள் வந்து செல்கின்றனர். இதனால் வத்தலக்குண்டு நகர் பகுதியில் தாங்க முடியாத அளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது, ‘‘நில ஆர்ஜிதம் தொடர்பாக சிலர் வழக்குகள் போட்டதால் பெரியகுளம், தேனி, சின்னமனூர் ஆகிய ஊர்களில் நடைபெறும் புறவழிச்சாலை பணிகள் நின்றுவிட்டன.  தற்போது வழக்குகள் முடிந்த நிலையில்  புறவழிச்சாலை பணிகள் நடக்கிறது. அந்த பணிகள் முடிந்த பின்னரே அனைத்து புறவழிச்சாலைகளிலும் மின்விளக்குகள் அமைக்கப்படும். அதன்பிறகு சுங்கச்சாவடி கட்டணமும் வசூலிக்கப்படும்’’ என்றனர். தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் மின்விளக்குகள் அமைக்த தயக்கம் காட்ட வரும் நிலையில், கணவாய்பட்டி ஊராட்சி பகுதியில்தான் புறவழிச்சாலை செல்கிறது. ஆகையால் கணவாய்பட்டி ஊராட்சி சார்பில் மின்விளக்குகள் அமைக்கலாமே என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரும் தனி அலுவலருமான வேதா கூறுகையில், ‘‘கணவாய்பட்டி ஊராட்சிக்கு மின்கட்டணம் கட்டவே நிதி சரியாகி விடுகிறது. மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என்றால் மின்வாரியத்திற்கு ஏராளமான முன்பணம் கட்ட வேண்டும் ஆகையால் அதற்கு வாய்ப்பே இல்லை’’ என்றார். இதுகுறித்து சமூக ஆர்வலர் பாக்யராஜ் கூறும்போது, ‘‘பல கோடி செலவழித்து புறவழிச்சாலை அமைத்து விட்டு மின்விளக்குகள் அமைக்காதது குதிரை வண்டியை வாங்கிவிட்டு சாட்டை வாங்க முடியாத நிலையாக இருக்கிறது. இதனால் மலையை குடைந்து புறழிச்சாலை செல்லும் பகுதியில் கொள்ளை அபாயம் அதிகளவில் உள்ளது. சில பெரிய அளவிலான வழிப்பறிகளும் நடந்துள்ளது. ஆகையால் பெரிய கொள்ளை நடக்கும் முன்னே மின் விளக்குகுள் அமைக்க அரசு முன்வரவேண்டும்’’ என்றார்.

Tags : Travelers ,pirates ,incidents ,Kodaikanal ,Pit ,tourists panic ,events , Kodaikanal, robbers, tourists
× RELATED காரைக்குடி-திண்டுக்கல் இடையே புதிய...