×

நடிகர் சங்க தேர்தல் வழக்கு ஐகோர்ட்டில் தீர்ப்பு தள்ளிவைப்பு

சென்னை:   நடிகர் சங்க  தேர்தலை ரத்து செய்யக்கோரி சங்க உறுப்பினர்கள் ஏழுமலை, பெஞ்சமின் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கு மற்றும் விஷால் தொடர்ந்த வழக்குகள்  நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. விஷால் தரப்பில் மூத்த வக்கீல் ஓம் பிரகாஷ் ஆஜராகி,  ‘பழைய நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவடைந்தாலும் புதிய நிர்வாகிகள் பதவியேற்கும் வரை பதவியில் நீடிக்கலாம். நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்’ என்றார்.  அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி,  பழைய நிர்வாகிகளின் பதவிக்காலம் காலாவதியாகிவிட்ட நிலையில் அவர்கள் நடத்தும் தேர்தலும் செல்லாதுதான். அதனால் தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். தனி அதிகாரியை நியமிக்க சங்கங்களின் பதிவாளருக்கு முழு அதிகாரம் உள்ளது. நடிகர் சங்க தேர்தல் நடைமுறைகளில் அரசு தலையிடவில்லை என்றார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார். இதேபோல நடிகர் சங்கத்துக்கு கீதா சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டதை எதிர்த்து நடிகர் சங்கம் மற்றும் சங்க பொருளாளரான நடிகர் கார்த்தி தொடர்ந்த வழக்கு விசாரணையும் நேற்று நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன்பாக நடந்தது. அப்போது பதிவுத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழ்நாடு சங்கங்கள் பதிவு விதியின்படி சங்கத்தின் பொதுச் செயலாளர் மட்டுமே வழக்கு தொடர முடியும். என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கின் விசாரணை நவம்பர் 22ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.


Tags : Court ,Actor , Actor Association Election, Case, Icort, Judgment postponed
× RELATED உடுமலை சங்கர் கொலை வழக்கில்...