×

மின்தடையின்றி லைவ் ஆக பழுது நீக்கும் திட்டம் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் அறிமுகம்

திருவள்ளூர்: வழக்கமாக உயர் அழுத்த மின்கோபுரங்கள், மின்சார கடத்திகளான கம்பி வடங்கள், துணைமின் நிலையங்களுக்கான மின் வழித்தடங்கள் ஆகியனவற்றில் பழுது ஏற்பட்டால் மின்சாரத்தை முழுமையாக துண்டித்து அதன் பிறகு பழுது எங்கு ஏற்பட்டுள்ளது என்பது கண்டுபிடித்து சரிசெய்யப்படும். இவ்வாறான முறையில் பழுதை நீக்குவதற்கு பலமணி நேரம் ஆகும். இந்த நிலையை, தமிழ்நாடு மின்சார வாரியம் அடியோடு மாற்றியிருக்கிறது. இதன்படி உயர் அழுத்த மின்கோபுரங்கள், மின்வழித்தடங்கள், உயர் அழுத்த மின்கம்பி வடங்களில் பழுது ஏற்பட்டால் மின்சாரத்தை துண்டிக்காமலேயே பாதுகாப்பான முறையில் பழுது நிக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மின்சார பழுதை நிக்கும் திட்டம் இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் தான் அறிமுகமாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் அலமாதி துணைமின் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உயர் அழுத்த மின்வழி தடங்களில் லைவ் ஆக மின்பழுது நீக்கப்படுவது பற்றி செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

 இதனை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் அமைச்சர்கள் பாண்டியராஜன், பெஞ்செமின், திருவள்ளூர் மாவட்ட மகேஸ்வரி ரவிக்குமார் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். அப்போது பேசிய மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி மின்சாரத்தை துண்டிக்காமல் லைவ் ஆக மின்பழுதை நிக்கும் முறை மூலம் உதாரணமாக நான்கு மணி நேரம் மின்தடை ஏற்படும் என்றால் புதிய முறையால் அரைமணி நேரமாக குறைந்திடும் என்று தெரிவித்தார். உயர் அழுத்த மின் கோபுரங்களில் மின்பழுது ஏற்பட்டால் மின்சாரத்தை துண்டிக்காமல் லைவ் ஆக சரிசெய்யும் பணிகளில் பிரத்யேக பயிற்சிபெற்ற பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதற்காக பெங்களுருவில் உள்ள மின்னுளப்பாதை பயிற்சி நிறுவனத்தில் அவர்களுக்கு பிரத்யேக பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பெங்களுருவில் பயிற்சி பெற்ற 160 பேர் பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி உள்ளிட்ட கோட்டங்களில் பணியாற்றி வருகிறார்கள். குறிப்பாக உயர் அழுத்த மின் கோபுரங்கள், மின்வழி தடங்களில் ஏற்படும் பழுதுகளை ட்ரோன்களை அனுப்பி முதலில் கண்டறிகின்றனர். பின்னர் அந்த குறிப்பிட்ட பகுதியில் ஹைட்ராலிக் ஏணியுடன் கூடிய சிறப்பு வாகனத்தை எடுத்து சென்று அந்த  ஹைட்ராலிக் ஏணி மூலம் பழுது ஏற்பட்ட இடத்தை அடைவர். பின்னர் உயர் அழுத்த மின்சாரம் உடலில் பாயாத வகையில் தயாரிக்கப்பட்ட பிரத்யேக உடையை அணிந்து மின்சாரத்தை துண்டிக்காமல் மின்பழுதை நீக்குவர். இதேபோன்று மின்சாரத்தை துண்டிக்காமல் லைவ் ஆக மின்பழுது நீக்கப்படுவதால் உதாரணத்திற்கு நான்கு மணி நேரம் ஏற்படும் மின்தடை வெறும் அரைமணி நேரமாக குறையப்படும் என்பதால் தடையற்ற மின்விநியோகம் உறுதி செய்யப்படுகிறது.

Tags : time ,India Introduction of Resettlement Project ,India ,Tamil Nadu , Live, Electrical Repair, India, Tamil Nadu, Introduction, Minister Thangamani
× RELATED அமெரிக்க பூங்காவில் முதன்முறையாக...