×

காளையார்கோவில் அருகே கிமு 300ம் ஆண்டுக்கு முந்தைய வெள்ளி நாணயம் கண்டெடுப்பு

சிவகங்கை: காளையார்கோவில் அருகே கிமு 300ம் ஆண்டுக்கு முந்தைய வெள்ளி நாணயம் கண்டெடுக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் தொடங்கி கண்டனிக்கரை, பகையஞ்சான், இலந்தக்கரை, வேலாரேந்தல், கூத்தனி, பாளையேந்தல், தவளிமண்டபம், கிராம்புளி, நல்லேந்தல், மாராத்தூர், பீக்குளம் உள்ளிட்ட கிராமங்களில் பழங்கால பொருட்கள் ஏராளமாக கிடைக்கின்றன. நாட்டாறு கால்வாயின் கரையில் மேற்கண்ட ஊர்கள் உள்ளன. நாட்டாறு ஒரு காலத்தில் மிகப்பெரிய ஆறாக இருந்து, தற்போது சிறிய கால்வாயாக உள்ளது. இப்பகுதிகளில் தொடர்ந்து தொல்லியல் ஆய்வு மேற்கொண்டு அரிய பொருட்களை சேகரித்து வரும் ஆய்வாளர் ஜெமினி ரமேஷ், இலந்தக்கரை கிராமத்தில் தற்போது பழங்கால வெள்ளி நாணயத்தை கண்டெடுத்துள்ளார்.

அவர் கூறுகையில், ‘‘கீழடியில் கிடைத்துள்ள பொருட்களும் இப்பகுதியில் கிடைக்கும் பொருட்களும் ஒன்று போல் உள்ளன. மகத நாட்டின் நாணயம், 1500 ஆண்டுகளுக்கு முந்தைய சிரியா நாட்டின் தங்க நாணயம், சங்ககால பாண்டியர் நாணயம், ராஜராஜசோழர் நாணயம் இங்கு கிடைத்துள்ளன. சிந்து சமவெளி நாகரிகம் குறித்து மொகஞ்சதாரோ, ஹரப்பா, கீழடியில் கிடைத்த அரிய ஆதாரங்களைப் போலவே இங்கும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் புதைந்து கிடக்கின்றன. இங்கும் தொல்லியல்துறையினர் ஆய்வு நடத்த வேண்டும்’’ என்றார்.

வெள்ளி நாணயம் குறித்து தமிழ்நாடு மாநில தொல்லியல்துறை சிவகங்கை மாவட்ட ஆய்வாளர் பாஸ்கரன் கூறுகையில், ‘‘இந்த வெள்ளி நாணயம் கிமு 300ம் ஆண்டுக்கு முந்தையதாகும். இது வட இந்தியாவில் ஆட்சி செய்த மகத பேரரசுக்கு சொந்தமான நாணயம். இதுபோன்ற நாணயங்கள் ஏற்கனவே தமிழகத்தின் சில பகுதிகளில் கிடைத்துள்ளன. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பல்வேறு நாடுகளுடன் வணிகத்தொடர்பு தமிழர்களுக்கு இருந்துள்ளது. அந்த அடிப்படையில் இந்த நாணயம் இப்பகுதியில் கிடைத்துள்ளது. நாணயம் கிடைத்துள்ள கிராமப்பகுதிகளில் ஏராளமான பொருட்களை பல்வேறு ஆய்வாளர்கள் கண்டுபிடித்து வருகின்றனர். இப்பகுதி ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய பகுதி’’ என்றார்.

Tags : Kaliyarikovil Dime , Dime
× RELATED நடிகர் சங்க கட்டட பணிகளுக்காக...