×

தமிழகம் முழுவதும் குடிமராமத்து திட்டத்தால் நீர்நிலைகள் நிரம்புகின்றன

* கூடுதலாக 16 லட்சம் ஏக்கர் பயிர் சாகுபடி
* தமிழக அரசு தகவல்

சென்னை: குடிமராமத்து திட்டத்தால் தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன என்றும், கூடுதலாக 16 லட்சம் ஏக்கர் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீண்ட காலமாக தூர்வாரப்படாமல், சீரமைக்கப்படாமல் இருந்த அணைகள், ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகள் இப்பொழுது குடிமராமத்து திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டு, விவசாயிகள் சங்கம் மூலமாக அவர்களின் பங்கேற்புடன் பணிகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் மாநிலம் முழுவதும் நீர்நிலைகளில் நீர் நிரம்பி வருகிறது. கடைமடை வரை தண்ணீர் செல்ல கடந்த காலங்களில் 30 நாட்கள் ஆகும். ஆனால், தமிழ்நாடு முழுவதும் குடிமராமத்துத் திட்டமும், காவிரி டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் பணிகள் திட்டமும், இந்த ஆண்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டதால் 15 முதல் 20 நாட்களில் கடைமடை வரை தண்ணீர் தங்குதடையின்றி செல்கிறது. இதனால், விவசாயிகள் மிக்க மகிழ்ச்சியடைந்து சம்பா நெல் சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

நில அளவை மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்வள அளவை பாதுகாத்தல், வண்டல் மண் பயன்பாட்டை விவசாயிகள் மத்தியில் அதிகரிக்க செய்து சுற்றுச்சூழல் பாதுகாத்தல், பசுமை பாதுகாப்பு என ஒரே நேரத்தில் பன்முக செயல்பாடுகள் நடைபெறுவதால் பொதுமக்கள் மத்தியில் குடிமராமத்து திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குடிமராமத்து பணியினால் தமிழ்நாடு நீராதாரங்கள் ஒரு புத்துணர்ச்சியை பெற்றுள்ளது. பொழிந்து கொண்டிருக்கும் பருவ மழையில் ஒரு துளி நீரும் வீணாகாமல் நீர்நிலைகள் அனைத்திலும் சேமிக்கப்படுகிறது. இதன் மூலம் நீர் ஆதாரங்கள் பெருகி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு ஒரு கோடியே இரண்டு லட்சத்து ஐம்பத்து இரண்டாயிரம் ஏக்கரில் மட்டுமே பயிர் சாகுபடி செய்யப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு ஒரு கோடியே பதினெட்டு லட்சம் ஏக்கரில் பயிர் சாகுபடி செய்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கூடுதலாக 16 லட்சம் ஏக்கர் பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu , Tamil Nadu is filled,civilian citizenship program
× RELATED விடுதலைப் போராட்டத்தில்...