×

காவேரிப்பட்டணம் அருகே 100 அடி கிணற்றில் விழுந்த பசுமாடு சாவு

காவேரிப்பட்டணம்: காவேரிப்பட்டணம் அருகே மோரன அள்ளி கிராமத்தில் 100 அடி ஆழம் கொண்ட விவசாய கிணற்றில் விழுந்த பசுமாடு உயிரிழந்தது. காவேரிப்பட்டணம் ஒன்றியம் மோரனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பேட்டப்பன். விவசாயியான இவர், தனக்கு சொந்தமான பசுமாட்டை வீட்டிற்கு அருகே உள்ள தனியார் விவசாய நிலத்தில் நேற்று காலை மேய்ச்சலுக்காக விட்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக அருகிலுள்ள 100 அடி ஆழம் கொண்ட விவசாய கிணற்றில் பசுமாடு தவறி விழுந்தது. கிணற்றில் சுார் 10 அடிக்கு தண்ணீர் இருந்தது.

அந்த தண்ணீரில் தத்தளித்தவாறு மாடு அபய குரல் எழுப்பியது. சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று மீட்க முயன்றனர். ஆனால், முடியாததால் கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில், நிலைய அலுவலர் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் 5 மணி நேரம் போராடி நவீன இயந்திரம் கொண்டு மாட்டை மீட்டு மேலே கொண்டு வந்தனர். ஆனால், அந்த மாடு சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தது. அதனைக்கண்டு விவசாயி போட்டப்பன் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

Tags : Greenwood ,Kaveripatnam , Cow
× RELATED கிராம தலைவரை ஓட ஓட துரத்தி பெட்ரோல்...