×

தண்டராம்பட்டு அடுத்த பீமாரப்பட்டியில் சாலை வசதிக்கு ஏங்கும் மலை கிராம மக்கள்

தண்டராம்பட்டு: தண்டராம்பட்டு அடுத்த பீமாரப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மலை கிராமங்களில், சாலை வசதி இல்லாததால் இன்றளவும் ஒத்தையடி பாதையை பயன்படுத்தும் நிலை தொடர்கிறது என மலை கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தண்டராம்பட்டு அடுத்த பீமாரப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மலை கிராமமான மேல் வலசை, கீழ் வலசை, அக்கரைப்பட்டி மலை கிராமங்களில் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த மலைவாழ் மக்கள் கிழங்குகள், தினை, சாமை, தேன், மூங்கில் அரிசி போன்றவற்றை பயிர் செய்து தங்களது வாழ்வை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த மலை கிராமங்களில் இருந்து அடிவார பகுதிகளுக்கு சாலை வசதி இல்லை. ஒத்தையடி பாதை வழியாக தான் தங்களது அனைத்து தேவைகளுக்கும் வந்து செல்கின்றனர். மேலும், இவர்கள் பயிர் செய்யும் விளை பொருட்களை, ஒத்தையடி பாதை வழியாக மலை அடிவாரத்தில் உள்ள கிராமமான பீமாரப்பட்டிக்கு வந்து, அங்கிருந்து தானிப்பாடி பகுதிகளில் விற்பனை செய்துவிட்டு செல்கின்றனர். இதுதவிர, கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகள் அதே ஒத்தையடி பாதை வழியாக ரெட்டியார் பாளையம் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் நிலை உள்ளது. இந்த கிராம மக்கள் சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதன்பேரில், கடந்த ஓராண்டுக்கு முன்பு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி ஊரக வளர்ச்சி, வருவாய், வனத்துறை, சுகாதார துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் அந்த ஒத்தையடி பாதை வழியாக மலை கிராமங்களுக்கு நடந்து சென்று ஆய்வு நடத்தினார். அப்போது அவர், ஓராண்டுக்குள் சாலை வசதி ஏற்படுத்தி தரப்படும் என மலை கிராம மக்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், இதுவரையில் சாலை அமைவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என்கின்றனர் மலைவாழ் மக்கள். எனவே, தங்களது நீண்ட நாள் கோரிக்கையான சாலை வசதியை உடனடியாக நிறைவேற்றி தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,village ,hill ,Beemarapatti ,Road Facility , Road Facility
× RELATED சாலவாக்கத்தில் உள்ள கடைகளில் சுகாதாரத்துறையினர் சோதனை