×

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது பணம் மாற்றிய டாஸ்மாக் ஊழியர்கள் யார்?: 3 ஆண்டுக்குப்பின் திடீர் கணக்கெடுப்பு

மதுரை: பண மதிப்பிழப்பு நடவடிக்கை காலத்தில், டாஸ்மாக் பணியாளர்கள் வங்கியில் செலுத்திய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் விபரம் குறித்து கணக்கெடுக்கும் நடவடிக்கையை டாஸ்மாக் நிர்வாகம் துவக்கியுள்ளது. மூன்று  ஆண்டுகளுக்குப் பிறகு துவக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைக்கு டாஸ்மாக் பணியாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.கடந்த 2016 நவம்பர் 8ம் தேதி இரவு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என மத்திய பாஜக அரசு அதிரடியாக அறிவித்தது. மேலும், உயர் மதிப்பு நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்ள கால அவகாசம் அளிக்கப்பட்டது. டாஸ்மாக் சூபர்வைசர்கள், விற்பனையின் மூலம் வசூலாகும் தொகையை தினமும் வங்கிகளில் செலுத்துவர். அப்படி செலுத்திய போது, செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1000 நோட்டுகளை கட்டியுள்ளனர். டாஸ்மாக் கடைகளில்  விற்பனையான பணத்தை கட்டும் போது, சில விற்பனையாளர்கள் வெளியில் இருந்து பெறப்பட்ட செல்லாத நோட்டுகளை மாற்றிக்கொடுத்ததாக புகார்கள் எழுந்தன. இதை பணியாளர்கள் மறுத்தனர். கடையில் விற்பனையான பணத்தைத்தான்  கட்டினோம் என  கூறினர்.

அப்போது இப்பிரச்னை முடிவுக்கு வந்த நிலையில், தற்போது மீண்டும் தலைதூக்கி உள்ளது. கடந்த 2016 நவம்பரில் உயர் மதிப்பு நோட்டுகள் பண மதிப்பிழப்பு செய்யப்பட்டபோது, யார், யார், எவ்வளவு தொகையை வங்கியில் செலுத்தினர்.  அவர்கள் செலுத்திய நோட்டுகள் விபரம் போன்ற தகவல்களை டாஸ்மாக் நிர்வாகம் கேட்டுள்ளது. இதனால் டாஸ்மாக் பணியாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.இதுகுறித்து பணியாளர்கள் கூறுகையில், ‘‘2016, நவம்பரில் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. எங்களிடம் சரக்கு வாங்கியவர்கள் கொடுத்த நோட்டுகளை வங்கியில், கட்டினோம். இப்போது உயர் மதிப்பு  நோட்டுகள் எவ்வளவு மாற்றி கொடுக்கப்பட்டுள்ளது என கணக்கெடுக்கின்றனர். உயர் மதிப்பு நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்பட்டு 3 ஆண்டுகள் ஆகி விட்டது. இது, அனைத்து ஊழியர்களிடையேயும் அதிர்ச்சியையும், கலக்கத்தையும்  ஏற்படுத்தியுள்ளது. டாஸ்மாக் துறையை போன்று, அரசு போக்குவரத்துக்கழகம், கைத்தறி உள்ளிட்ட அரசு துறைகளிலும் பணம் மாற்றியுள்ளனர். இத்துறைகளை எல்லாம் விட்டு விட்டு, டாஸ்மாக்கை மட்டும் குறி வைப்பது ஏன்?’’ என கேள்வி  எழுப்பியுள்ளனர்.



Tags : deferment action , case ,cash ,depreciation,changed money
× RELATED அதிமுக முன்னாள் எம்எல்ஏ மலரவன் மறைவுக்கு எடப்பாடி இரங்கல்