×

உச்சநீதிமன்ற நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது: திருமாவளவன் பேட்டி

புதுச்சேரி, உச்சநீதிமன்ற நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி உள்ளதாக விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் சனாதன கல்விக்கொள்கை எதிர்ப்பு மாநாடு புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நேற்று மாலை நடந்தது. புதுச்சேரி காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம், விசிக பொதுச்ெசயலாளர்கள் ரவிக்குமார் எம்பி, சிந்தனைச்செல்வன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி பங்கேற்று நிறைவு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை மக்களுக்கு எதிராக இருக்கிறது. இதற்கு முன்பு கல்வி மாநில பட்டியலில் இருந்தது. இப்போது மத்திய பட்டியலுக்கு மாறுகிறது. இதன்மூலம் மாநில அரசின் அதிகாரத்தில் மத்திய அரசு கை வைக்கிறது. புதிய கல்விக்கொள்கை மூலம் இந்தியாவில் கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை குறையும். இடைநிற்றல் அதிகரிக்கும். அனைவருக்கும் கல்வி அளிப்பதே ஜனநாயகம். குறிப்பிட்டோருக்கு கல்வி மறுப்பது சனாதானம். நாட்டில் கல்வியை மேம்படுத்த வேண்டும். கல்விக்கூடங்களின் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு பேசினார்.

முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், அயோத்தி வழக்கின் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கின்றது. உச்சநீதிமன்றம் மக்களின் இறுதியான ஒரே பாதுகாப்பு அரண் ஆகும். ஆனால் அதன் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது. உள்ளாட்சி தேர்தலை திமுக தலைமையில் சந்திக்கவுள்ளோம். கூட்டணி கட்சிகளின் வெற்றிக்காக பாடுபடுவோம். சமத்துவத்தை தமது அடிப்படை கோட்பாடாக வைத்து திருக்குறளை வழங்கிய திருவள்ளுவர் மீது சாதிசாயம், மதச்சாயம் பூசுவது அவரையே கொச்சப்படுத்துவதாகும். அத்தகைய போக்கு கைவிடப்பட வேண்டும். நடிகர் ரஜினிகாந்த் திருவள்ளுவர் மீதும், எனது மீதும் காவிச்சாயம் பூசும் முயற்சி செய்யப்படுகின்றது என்று கூறிவிட்டு பிறகு சற்று மழுப்பலாக பதில் அளித்துள்ளார். அவர் எச்சரிக்கையாக இருக்கிறார் என்றாலும் ஏதோ ஒரு அழுத்தத்தில் இருக்கிறார் என்பதை புரிந்துகொள்ள முடிகின்றது என்றார்.

Tags : Thirumavalavan ,Supreme Court ,Questioning , Supreme Court, credibility, questioning, Thirumavalavan
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...