×

மேற்கு வங்கத்தை புரட்டிய புல்புல் புயல்: பாதிப்புகள் குறித்து முதல்வர் மம்தா பானர்ஜியிடம் தொலைப்பேசியில் கேட்டறிந்தார் பிரதமர் மோடி

டெல்லி: புல்புல் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியிடம், பிரதமர் நரேந்திர மோடி தொலைப்பேசியில் கேட்டறிந்தார். வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புதிய  புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘புல்புல்’ என பெயரிடப்பட்டது. வங்கக் கடலில் மிகக் கடுமையான புயலாக மையம் கொண்டிருந்த புல் புல் புயல் நேற்றிரவு கடுமையான புயலாக வலுவிழந்தது. புயல் காரணமாக ஒடிசா மற்றும் மேற்கு  வங்க மாநிலங்களில் கடலோர மாவட்டங்களில் நேற்று முழுவதும் கனமழை பெய்தது.

ஒடிசாவில் புயல் காற்றில் சிக்கி தனித் தீவில் சிக்கிக் கொண்ட எட்டு மீனவர்களை ஒடிசா பேரிடர் அதிவிரைவுப் படையினர் மீட்டனர். புயல் காரணமாக பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. கேந்திரபரா மாவட்டத்தில் சுவர் இடிந்து  விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். ஒடிசாவில் புல் புல் புயலால் பயிர்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதுபோல் மேற்கு வங்கத்தில் மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதில் பல இடங்களில் பெரும் பாதிப்பு  ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கனமழைக்கு ஒருவர் உயிரிழந்தார். நகரின் பல பகுதிகளில் மழை நீர் தேங்கியதுடன் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது.

இதனிடையே, இரவு 11 மணி அளவில் மேற்குவங்கம் மற்றும் வங்கதேசத்துக்கிடையே 24 பர்கானா மாவட்டம் அருகே புயல் கரையைக் கடக்கத் தொடங்கியதால் அங்கும் அண்டை மாவட்டங்களிலும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. மணிக்கு  85 கிலோமீட்டர் முதல் 95 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. கிழக்கு மித்னாப்பூர் மற்றும் கக்த்வீப் மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

இதுபோல் மேற்கு வங்கத்தில் புல்புல் புயலால் ஏற்பட்டுள்ள பயிர் சேதத்தை மதிப்பிட மத்திய குழுவினரை அனுப்பவேண்டும் என முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டுள்ளார். கட்டுப்பாட்டு அறையில் இருந்து புயல் நிலவரங்களை  பார்த்தறிந்த மம்தா, ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார். புல்புல் புயலால் கொல்கத்தா விமான நிலையம் நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை மூடப்பட்டுள்ளது.  தேசிய பேரிடர் மேலாண் படையை சேர்ந்த 17 குழுவினர் மேற்கு வங்காளத்திலும், 6 குழுவினர் ஒடிசாவிலும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில், புல்புல் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியிடம், பிரதமர் நரேந்திர மோடி தொலைப்பேசியில் கேட்டறிந்தார். இதுதொடர்பாக, பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், புல்புல் புயல்  மற்றும் கனமழையால் கிழக்கு இந்தியாவில் ஏற்பட்டுள்ள நிலைமையை ஆய்வு செய்துள்ளேன். புயலால் ஏற்பட்டுள்ள சூழல் பற்றி மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியிடம் பேசியுள்ளேன். தேவைப்படும் அனைத்து உதவிகளும் மத்திய  அரசால் வழங்கப்படும் என உறுதியளித்துள்ளேன் என பதிவிட்டுள்ளார்.


Tags : Modi ,telephone call ,Mamata Banerjee , Prime Minister Modi telephones Mamata Banerjee on phone
× RELATED மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால்...