×

சிறுவர்களுக்கு போதை மருந்து விற்கும் விவகாரம் தமிழக வணிக நிறுவனங்களில் சோதனை: தேசிய குழந்தைகள் ஆணையம் அதிரடி

சென்னை: சிறுவர்களுக்கு போதை மருந்து விற்கும் விவகாரத்தை அடுத்து, தமிழகம் முழுவதும் வணிக  நிறுவனங்களில் சோதனை நடத்த தேசிய குழந்தைகள் ஆணையம் முடிவு செய்துள்ளது.தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் போதை பழக்கத்திற்குள்ளான சிறுவர்கள் ‘‘கேன்சர்’’ நோய்க்கு பயன்படுத்தப்படும் ஒருவித மருந்தை ஊசி மூலம் உடலில் செலுத்துவது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, தேசிய குழந்தைகள் ஆணையம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இதேபோல, நாடு முழுவதும் போதைக்கு அடிமையான சிறுவர்கள் தொடர்பாக விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டது. 30 மாவட்ட கலெக்டர்கள், போலீஸ்  கண்காணிப்பாளர்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் சிறுவர்களுக்கான போதை மருந்து விற்கும் வணிக நிறுவனங்களில் சோதனை நடத்த தேசிய குழந்தைகள் ஆணையம் முடிவு செய்துள்ளது.இதுதொடர்பாக தேசிய குழந்தைகள் ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் கூறியதாவது:
தேசிய குழந்தைகள் ஆணையம் சார்பில் போதை பொருட்கள் விவகாரத்தில் ஆணையம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பான கூட்டம் டெல்லியில் நடந்தது. இதில்  போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம், மத்திய மருந்து தரக்  கட்டுப்பாட்டு  அமைப்பு, மருந்துத் துறை மற்றும் தேசிய சமூக பாதுகாப்பு நிறுவனங்களின்  அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது சமீபத்தில் போதைக்காக பயன்படுத்தப்பட்டு வந்த “tapentadol” மருந்தை, ஆய்வு செய்து அதன் பயன்பாட்டை அதிகளவில் குறைக்க ஆணையம் சார்பில் பரிந்துரை செய்யப்பட்டது. மேலும் இந்த மருந்தின் தவறான பயன்பாட்டின்  தகவல் பற்றி பொதுமக்களும் புகார் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கு போதையை உண்டாக்கும் மருந்தின் (tapentadol) வணிக  பயன்பாட்டை தமிழகத்தில் அதிக அளவில் குறைக்க தேசிய குழந்தைகள் நல  ஆணையம்  முடிவு செய்துள்ளது.
முதல்கட்டமாக, போதை மருந்து விற்கும் வணிக நிறுவனங்களில் அதிரடி சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, புதுக்கோட்டை, திருப்பூர் மற்றும்  மதுரை மாவட்டங்களில் போதை மருந்து பொருட்களை ஒழிக்க கடும்  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.



Tags : children ,businesses ,Tamil Nadu ,enterprises ,Trial , children,commercial enterprises, National Children's Commission ,Action
× RELATED சேலம் உட்கோட்டத்திலுள்ள ரயில்வே...