×

மூணாறு அருகே பண்ணை வீட்டில் கணவனை கொன்று புதைத்துவிட்டு கள்ளக்காதலனுடன் பெண் ஓட்டம் : வாட்ஸ் அப் வீடியோவால் பரபரப்பு

திருவனந்தபுரம்: மூணாறு  அருகே காணாமல் போன தொழிலாளியை அவரது மனைவியும், கள்ளக்காதலனும் சேர்ந்து  கொலை செய்து பண்ணை வீட்டில் புதைத்து விட்டு தப்பி ஓடிய சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் இடுக்கி  மாவட்டம்  சாந்தன்பாறை பகுதியை சேர்ந்தவர் ரிஜோஷ்(31). இவரது மனைவி லிஜி(29). தம்பதிக்கு ஜோயல்(10), ஜோபிட்டா (8), ஜோவானா (2) என்று 3 குழந்தைகள்  உள்ளனர். ரிஜோஷ் மற்றும் லிஜி இருவரும் புத்தடியில் உள்ள  மஷ்ரூம் ஹட் என்ற  பண்ணை வீட்டில் பணிபுரிந்து வந்தனர். ரிஜோஷ் அங்குள்ள விலங்குகளை  கவனிக்கும் வேலையும், லிஜி தோட்ட வேலையும் செய்து வந்தனர். இந்த  பண்ணையில் திருச்சூர் மாவட்டம் சாலக்குடியை சேர்ந்த வாசிம் மேலாளராக  உள்ளார். அப்போது வாசிம்- லிஜி இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில்  கள்ளக்காதலாக மாறியது. தொடர்ந்து கணவன் இல்லாத நேரத்தில் இருவரும் வீட்டில்  ரகசியமாக சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இவர்களது கள்ளக்காதல்  விவகாரம் ரிஜோசுக்கு தெரிய வந்தது. அவர் மனைவியை கண்டித்துள்ளார்.  இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த   அக்டோபர் 31ம் தேதி வேலைக்கு சென்ற ரிஜோஷ் வீடு திரும்பவில்லை. இது  தொடர்பாக லிஜி சாந்தன்பாறை காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இதன் ஒரு  கட்டமாக போலீசார் லிஜியிடம் விசாரணை நடத்தினர். அப்போது  சில தினங்களுக்கு  முன்பு ரிஜோஷ் கோழிக்கோடு, திருச்சூர் ஆகிய இடங்களில்  இருந்து தன்னை போனில்  அழைத்ததாக கூறினார். உடனே அவர் பேசியதாக கூறிய எண்ணை  போலீசார் கண்டுபிடித்து விசாரித்தனர். விசாரணையில் அது வாசிமின்  உறவினர்களின் எண் என்பது தெரியவந்தது. இதன் மூலம் லிஜி கூறியது  பொய்யான தகவல் என்பதும் தெரியவந்தது. இதனால் லிஜி மீது போலீசாருக்கு  சந்தேகம் எழுந்தது. அதன் பிறகு போலீசார் அவரது நடவடிக்கைகளை  ரகசியமாக கண்காணிக்க தொடங்கினர். இதேபோல் வாசிமின் உறவினர்களிடமும்  தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த 4ம் தேதி லிஜியும்,  வாசிமும் மாயமானார்கள். இதனால் லிஜியின் மீதான சந்தேகம் மேலும் வலுத்தது. போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் ரிஜோஷ் கொலை  செய்யப்பட்டு பண்ணை ேதாட்டத்தில் புதைக்கப்பட்டுள்ளதாக ரகசிய தகவல்  கிடைத்தது. அதன்படி போலீசார் பண்ணை வீட்டில் உள்ள தோட்டத்தில்  தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அங்கு ரிஜோஷ் உடல் புதைக்கப்பட்டிருந்ததை  கண்டுபிடித்தனர்.

உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக இடுக்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதனால் மாயமான ரிஜோஷ் கொலை செய்யப்பட்டது உறுதியானது. ஆகவே மாயமான வாசிம்  மற்றும் லிஜியை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே  வாசிம்  மூணாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு வாட்ஸ் அப்பில் ஒரு வீடியோ  அனுப்பி  உள்ளார். அந்த வீடியோ பதிவில் ரிஜோஷை நான்  தான் கொலை செய்தேன்.  பண்ணை வீட்டில் குழிதோண்டி  புதைத்துள்ளேன். இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு இல்லை என்றும் கூறி உள்ளார். ஆனால் லிஜியும் சேர்ந்துதான் ரிஜோஷை கொலை செய்திருப்பார் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். போலீசார் இருவரையும் தேடிவருகின்றனர். இந்த சம்பவம் தற்போது அந்த  பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உடலை கண்டுபிடித்த மோப்ப நாய்


பண்ணை தோட்டத்தில் அடர்த்தியான மரங்கள், செடிகள் வளர்க்கப்பட்டுள்ளது. ஆகவே  ரிஜோஷ் புதைக்கப்பட்ட இடத்தை கண்டுபிடிப்பதில் சிக்கல் உருவானது. எனவே  மோப்பநாய் ஜெனியை போலீசார் வரவழைத்தனர். ரிஜோஷ் வீட்டில் அவரது உடைகளை  மோப்பம் பிடித்த ஜெனி பண்ணை தோட்டத்தில் பல்வேறு இடங்களில் மோப்பம்  பிடித்தபடி அங்கும் இங்குமாக ஓடியது. இறுதியாக புதியதாக தோண்டி  மூடப்பட்ட ஒரு இடத்தில் நின்றது. இதையடுத்து போலீசார் அந்த இடத்தை தோண்டி  பார்த்தனர். அங்கு ரிஜோஷ் உடல் இருந்தது. சிக்கலான இடத்தில் துல்லியமாக  துப்பு துலக்கிய மோப்ப நாய் ஜெனியின் மோப்ப திறன் கண்டு பொதுமக்கள் ஆச்சரியப்பட்டனர்.

மதுவில் விஷம் கலப்பா?

ரிஜோசுக்கு  மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. அவருக்கு வாசிம் அடிக்கடி மது குடிக்க பணம் கொடுத்து வந்துள்ளார். அவரை கொலை செய்ய திட்டமிட்ட வாசிம்  மதுவில் விஷம் கலந்து கொடுத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கொலை  செய்த பிறகு ஜேசிபி மூலம் பள்ளம் தோண்டி உடலை புதைத்துள்ளார். பண்ணைக்குள்  ஜேசிபியால் பள்ளம் தோண்டியது குறித்து கேட்டபோது, ஒரு மாடு செத்துவிட்டது.  அதை புதைப்பதற்காக பள்ளம் தோண்டுவதாக அப்போது அவர் கூறிய தகவல் வெளியாகி  உள்ளது.

Tags : Farmhouse , Woman ,husband killed , buried Excited ,Whats Up Video
× RELATED செவ்வந்திபாளையத்தில் வாய்க்காலில் படர்ந்த செடி கொடிகளால் நீரோட்டம் தடை