×

வேதாரண்யத்தில் சுவடு தெரியாமல் மறைந்த கின்னஸ் சாதனை

வேதாரண்யம் : வேதாரண்யம் தாலுகா, புஷ்பவனம், நாலுவேதபதி கடற்கரையோர கிராமங்களில் சுனாமி நினைவாக உலக கின்னஸ் சாதனை படைப்பதற்காக 2005 காந்திஜெயந்தி அன்று 2 லட்சத்து 54 ஆயிரத்து 464 மரக்கன்றுகள் நடப்பட்டன. உலக கின்னஸ் சாதனைக்காக நடப்பட்ட இந்த மரங்கள் அனைத்தும் பராமரிப்பு இன்றி தற்போது முற்றிலும் அழிந்துவிட்டன. கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி உலகத்தையே சோகத்தில் ஆழ்த்தியதும், லட்சக்கணக்கான உயிர்களை பலி வாங்கியதும் பெரும் பொருள் சேதத்தை ஏற்படுத்திய சுனாமி ஏற்பட்டது.

வேதாரண்யம் தாலுகா கடற்கரை பகுதி கிராமங்களான ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், நாலுவேதபதி, வெள்ளப்பள்ளம், வானவன்மகாதேவி, கோவில்பத்து உள்ளிட்ட கிராமங்களில் பலர் இறந்தும், வீடுகள் சேதமடைந்தும் மிகவும் பாதிப்பு ஏற்பட்டது. இதுபோன்று வரும் காலங்களில் பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும், கடற்கரையோரங்களில் இயற்கை தடுப்பு அமைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. இதையொட்டி உலக கின்னஸ் சாதனை படைக்கவும் தடுப்பு அரணாக விளங்கவும் ஒரே நாளில் 254,464 மரக்கன்றுகளை கடற்கரை கிராமங்களான நாலுவேதிபதி, புஷ்பவனம் கிராமங்களில் 2005ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி காந்திஜெயந்தி அன்று நட்டு சாதனை படைத்தனர்.

1,74,542 பேர் சுனாமியில் இறந்ததன் நினைவாக நடப்பட்ட மரக்கன்றுகள் நன்றாக வளர்ந்து வந்தன. தற்போது அந்த மரங்கள் அனைத்தும் இருந்த இடம் தெரியாமல் வெட்டப்பட்டு முற்றிலும் அழிந்துவிட்டது. ஒரு சில மரங்கள் மட்டும் ஆங்காங்கே தென்படுகிறது. சுனாமி வந்து கிராமங்களை அழித்துவிட்டு சுவடு தெரியாமல் சென்றதுபோல இயற்கை தடுப்பு அரண்கள் ஏற்படுத்தப்பட்டு நன்றாக இருந்த மரங்களை சுவடு தெரியாமல் சமூக விரோதிகள் அழித்துவிட்டனர்.

எந்த நோக்கத்திற்காக மாவட்ட நிர்வாகம் மரங்களை நட்டார்களோ அந்த நோக்கம் முற்றிலும் அழிந்துவிட்டது. மேலும் சென்ற ஆண்டு வீசிய கஜா புயலில் இருந்த ஒருசில மரங்களும் முற்றிலும் அழிந்துவிட்டது. எனவே மீண்டும் இந்த கிராமங்களில் மரங்களை இயற்கை பேரிடர் அரண் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை தெரிவித்துள்ளனர்.

Tags : Guinness ,disappearance ,region , Guinness record,vedaranyam ,disappearing ,
× RELATED இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பதற்றம்!