×

ஆக்கிரமிப்பு புகார் கொடுத்தவர் மீது பொய் வழக்கு இன்ஸ்பெக்டருக்கு 25 ஆயிரம் அபராதம்: மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: குளம் ஆக்கிரமிப்பு புகார் கொடுத்தவருக்கு மிரட்டல் விடுத்து, மனித உரிமை மீறலில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டருக்கு 25 ஆயிரம் அபராதம் விதித்து, மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை எர்ணாவூர் பகுதியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன். சமூக ஆர்வலரான இவர், மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:திருவொற்றியூரில் ஒரு குளம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது தொடர்பாக கடந்த 2012ம் ஆண்டு அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பினேன். இதையடுத்து ஆக்கிரமிப்பாளர்கள் எனக்கு பல்வேறு வழிகளில் தொந்தரவு கொடுத்தனர். இதுகுறித்து  சாத்தாங்காடு போலீசில் புகார் செய்தேன். புகார் மீது நடவடிக்கை எடுக்காமல், புகாரை வாபஸ் பெறும்படி அப்போதைய சாத்தாங்காடு இன்ஸ்பெக்டர் அழகேசன் என்னை மிரட்டினார்.

மேலும், ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு, என் மீது பொய் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையின் போது இன்ஸ்பெக்டர் என்னை தாக்கினார். இதனால், உடல் அளவிலும், மனதளவிலும் கடுமையாக  பாதிக்கப்பட்டேன். எனவே, சம்மந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி சித்தரஞ்சன் மோகன்தாஸ், ‘‘சாட்சியம் மற்றும் ஆவணங்களை வைத்து பார்க்கும் போது இன்ஸ்பெக்டர் அழகேசன் மனித உரிமை மீறலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. எனவே அவருக்கு ₹25 ஆயிரம்  அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை தமிழக அரசு மனுதாரருக்கு 2 மாதத்துக்குள் வழங்கி விட்டு, இன்ஸ்பெக்டரிடம் வசூலித்துக் கொள்ளலாம். மேலும், இன்ஸ்பெக்டர் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று  உத்தரவிட்டார்.

Tags : Human Rights Commission ,inspector ,complainant ,Fine Inspector , Lying,Aggressive , inspector, Human Rights Commission ,orders
× RELATED தூத்துக்குடி துப்பாக்கி சூடு...