×

கடன் சுமை காரணமாக தம்பதி தூக்கிட்டு தற்கொலை: பரபரப்பு கடிதம் சிக்கியது

பெரம்பூர்: கடன் பிரச்னையால் தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஓட்ரேி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. சென்னை ஓட்டேரி செல்லப்பா தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் சந்திரன் (64). இவரது மனைவி விஜயலட்சுமி (60). இவர்களுக்கு அரிபிரசாத் என்ற மகனும், ராதிகா என்ற மகளும் உள்ளனர். அவர்கள் திருமணமாகி தனியாக  வசிக்கின்றனர்.  சந்திரன் வீட்டில் வேலை செய்யும் சித்ரா என்பவர் நேற்று வழக்கம்போல் வேலை செய்ய வீட்டுக்கு வந்தபோது, படுக்கை அறையில் நைலான் கயிற்றில் தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி ஓட்டேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் வள்ளி, சப்- இன்ஸ்பெக்டர்கள் சஜிபா, சாந்தா  மற்றும் போலீசார்  சம்பவ இடத்திற்கு சென்று, சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம்  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வீட்டில் சோதனை செய்தபோது, சந்திரன் எழுதி வைத்த கடிதம் சிக்கியது. அதில், சந்திரன் மயிலாப்பூரில் பங்கு சந்தையில் ஈடுபட்டு வசதியாக வாழ்ந்து வந்ததாகவும், திடீரென ஏற்பட்ட கடன் சுமையால் அந்த வீட்டை விற்றுவிட்டு, கடந்த ஒரு  வருடத்திற்கு முன்பு ஓட்டேரியில் வாடகை வீட்டிற்கு வந்ததும், கடன் கொடுத்தவர்களுக்கு தொடர்ந்து வட்டியாக மாதம் 1 லட்சம் கொடுத்து வந்ததும், தொடர்ந்து வட்டி பணமும் அசலும் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டதால் தற்கொலை  செய்து கொள்வதாகவும், கடன் கொடுத்தவர்கள் தங்கள் குடும்பத்தாரை தொல்லை செய்யக்கூடாது என்றும் கடிதத்தில்   எழுதி இருந்தது தெரியவந்தது. போலீசார் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.




Tags : suicide ,couples , Because , debt burden, Couple commits, suicide
× RELATED தர்மபுரி அருகே இன்ஸ்டாகிராம்...