சேத்துப்பட்டு: சேத்துப்பட்டு பிடிஓ அலுவலகத்தில் நேற்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பயனாளிகளுக்கு அம்மா சிமென்ட் வழங்குவதில் இருந்த குளறுபடிகளை கண்டறிந்த அவர் அதிகாரிகளை கண்டித்தார். சேத்துப்பட்டு பிடிஓ அலுவலகத்தில் நேற்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பிடிஓக்கள் எழிலரசு, அபியுல்லா, தாசில்தார் சுதாகர், ஒன்றிய பொறியாளர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்களிடம் பாரத பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில், எவ்வளவு வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. என கேட்டறிந்தார்.
பின்னர் கலெக்டர் பேசியதாவது: 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி அனைத்து பயனாளிகளுக்கும் வீடு கட்டித்தர வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் நிராகரிக்க கூடாது. நமது மாவட்டம் மிகவும் பின் தங்கிய மாவட்டம். இங்கு ஏழை, எளிய மக்கள் அதிகம் உள்ளனர். அவர்களால் வீடு கட்டி கொள்ள முடியவதில்லை. எனவே, அவர்களை ஊக்கப்படுத்தி வீடு கட்டி கொள்ளும் அளவுக்கு உருவாக்க வேண்டும். அலைக்கழிக்க கூடாது. வீடு கட்ட தேவையான சிமென்ட், கம்பி, ஜல்லி, மணல், செங்கல் போன்றவற்றை குறைந்த விலைக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடு கட்ட வசதி இல்லாதவர்களுக்கு ஒப்பந்ததாரர்கள் மூலம் கட்டித்தர முன்வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, அலுவலகத்தில் இருந்த அம்மா சிமென்ட் உள்ளிட்ட பதிவேடுகளை பார்வையிட்டார். அப்போது, அதில் பல்வேறு குளறுபடிகள் இருந்ததை கவனித்த கலெக்டர், கேள்வி கேட்க ஆள் இல்லாததால் இவ்வளவு மெத்தனமாக இருக்கிறீர்கள் என அதிகாரிகளை கண்டித்தார். இதையடுத்து, சேத்துப்பட்டு பேரூராட்சி அலுவலகம் அருகில் வசிக்கும் முஸ்லிம்கள், தங்கள் பகுதியில் கழிவுநீர் கால்வாய் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். உடனடியாக நடவடிக்கை எடுக்க பேரூராட்சி செயலருக்கு உத்தரவிட்டார்.
