×

வண்டலூரில் மாணவர் சுடப்பட்ட விவகாரம்: செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்த விஜய்க்கு 15 நாள் நீதிமன்ற காவல்

காஞ்சிபுரம்: சென்னையை அடுத்த வண்டலூரில் பாலிடெக்னிக் மாணவர் சுட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில் தேடப்பட்டு வந்த விஜய் என்ற நபர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் வழங்கி செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணவர் முகேஷ் உயிரிழக்க காரணமான துப்பாக்கியை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குப்பைத் தொட்டியில் இருந்து எடுத்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் கடந்த 2 ஆண்டுகளாக துப்பாக்கியை புதைத்து வைத்ததாகவும், தீபாவளியன்று வெளியே எடுத்ததாகவும் விஜய் கூறியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூரை அடுத்த வேங்கடமங்கலத்தை சேர்ந்த 19 வயதான முகேஷ் குமார் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். தந்தையை இழந்த முகேஷ் குமார் தண்ணீர் கேன் விநியோகிக்கும் தொழில் செய்து வரும் தனது தாய் சோபனாவுக்கு உதவியாக இருந்து வந்தார். பஜனை கோவில் தெருவை சேர்ந்த அவர், அதேபகுதியில் பார்கவி அவன்யூவில் வசிக்கும் தனது நண்பனான விஜய்யை பார்க்க சென்றுள்ளார். 21 வயதான விஜய் ஆன்லைனில் உணவு விநியோகிக்கும் நிறுவனம் ஒன்றின் ஊழியர் ஆவார்.

விஜயும், முகேஷும் ஒரு அறையில் பேசிக்கொண்டிருக்க விஜயின் சகோதரரான உதயா எனபவர் வீட்டிற்கு வெளியிலும், மற்றொரு சகோதரரான அஜித் வீட்டில் உள்ள வேறொரு அறையிலும் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, விஜய் மற்றும் முகேஷ் இருந்த அறையில் இருந்து திடீரென துப்பாக்கியால் சுடப்பட்ட சத்தம் கேட்கவே அதிர்ச்சியடைந்த உதயாவும், அஜித்தும் ஓடிச் சென்று பார்த்துள்ளனர். அந்த அறையில் இருந்து விஜய் கையில் துப்பாக்கியுடன் தப்பி ஓடினார். அறையின் உள்ளே முகேஷின் வலது நெற்றியில் துப்பாக்கி குண்டு பாய்ந்து சிதைந்த நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உயிருக்கு போராடிய முகேஷை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள தாழம்பூர் போலீசார் தப்பி ஓடிய விஜயின் சகோதரர்கள் அஜித் மற்றும் உதயா ஆகியோரை பிடித்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விஜய்யை கண்டுபிடிப்பதற்காக வண்டலூரில் இருந்து கேளம்பாக்கம் வரையிலான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வந்தனர். மேலும் உறவினர்களின் வீடுகளில் விஜய் பதுங்கியுள்ளாரா என்றும் சோதனை மேற்கொண்டு வந்தனர். விஜய் பயன்படுத்திய துப்பாக்கி நாட்டு துப்பாக்கியாக இருக்கலாம் என்றும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. போலீசாரால் தீவிரமாக தேடப்பட்டு வந்த விஜய் தற்போது செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

Tags : Vandalur ,court ,Vijay ,Chengalpattu ,Polytechnic , Student shot, Vijay, Chengalpattu court, Vandalur, Chennai, shoot
× RELATED மக்களவைத் தேர்தலையொட்டி ஏப்ரல் 19ஆம் தேதி வண்டலூர் பூங்கா மூடப்படும்..!!