×

மோகனூர் அகன்ற காவிரியில் சாக்கடை கழிவுநீர் கலப்பதால் அசுத்தமான காவிரியாக மாறியது

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் மோகனூரில் ஓடும் அகன்ற காவிரி ஆறு, சுமார் 2 கிமீ பரப்பளவு கொண்டதாகும். ஆற்றில் தண்ணீர் நிரம்பி செல்லும் போது, 2 கிமீ தொலைவும் நீர் நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கும். தற்போது ஆற்றில் சற்று குறைவாக தண்ணீர் செல்வதால் ஆங்காங்கே பாறைகள், மணல் திட்டுகள் வெளியே தெரிகிறது. பல ஆண்டாக மோகனூர் காவிரியில் மணல் கொள்ளை அதிகமாக நடைபெறுவதால் ஆற்றின் போக்கே மாறிவிட்டது. மோகனூர் காவிரி ஆற்றில் பேரூராட்சியின் சாக்கடை கழிவுநீர், கூட்டுறவு சர்க்கரை ஆலை கழிவுநீர் ஆகியவை கலக்கிறது. ஈஸ்வரன் கோயில் அருகில் இருந்து சாக்கடை கழிவுநீர் வெள்ளம் போல வந்து காவிரியில் கலக்கிறது. மேலும் ஈஸ்வரன் கோயிலை சுற்றியுள்ள காவிரி ஆற்றின் முகப்பு பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் ஆங்காங்கே தேங்கி கிடக்கிறது. இதனால் ஆற்று தண்ணீரின் நிறமே மாறிவிட்டது. இந்த இடத்தில் தான் மோகனூர் பேரூராட்சி மற்றும் எருமப்பட்டி கூட்டுகுடிநீர் திட்டத்துக்கு தண்ணீர் உறிஞ்சும் ராட்சத கிணறுகள் அமைந்துள்ளன. துர்நாற்றத்துடன் வரும் தண்ணீரை தான் பொதுமக்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் வினியோகம் செய்து வருகிறது.

கோயிலின் அருகாமையில், உள்ள சுவர்களில், காவிரி ஆற்றில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குப்பைகளை அதற்குரிய பெட்டியில் போடவேண்டும் என பேரூராட்சி நிர்வாகம் எழுதி வைத்துள்ளது. ஆனால் இதை நடைமுறை படுத்த எந்த நடவடிக்கையும் பேரூராட்சி நிர்வாகம் எடுக்கவில்லை. இதன் காரணமாக அகன்ற காவிரி அசுத்தமான காவிரியாக மாறி வருகிறது. தூய்மை இந்தியா  என்ற திட்டத்தை  கூட காவிரி ஆற்று பகுதியில் மோகனுர் பேரூராட்சி மேற்கொள்ளாத அவல நிலையில் இருக்கிறது. மிகச்சிறிய ஊரான மோகனூருக்கு பெருமை சேர்ப்பதே காவிரி ஆறு தான். அந்த காவிரி ஆற்றை கூட பாதுகாக்க முடியாத நிலையில் மோகனூர் பேரூராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.

இங்குள்ள ஈஸ்வரன் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்காக வந்து செல்கிறார்கள். குறிப்பாக மறைந்த முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்க, இந்த கோயிலின் அருகாமையில் உள்ள ஆற்று பகுதியை தான் மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். அந்த இடத்திலும் சுகாதாரமில்லாத நிலை நிலவுகிறது. இதனால் ஆற்றில் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் சென்று தான் பொதுமக்கள் குளிக்க வேண்டிய நிலை உள்ளது. பக்தர்கள் குளிக்க படித்துரை வசதி கூட செய்து கொடுக்கபடவில்லை என வெளியூர் பக்தர்கள் வேதனைப்படுகிறார்கள்.

காவிரி ஆற்றில் ஓரத்தில் உடைந்த சாமி சிலைகளும், மரத்தால் செய்யப்பட்ட சாமி சிலைகளும் குப்பை போல  வீசப்பட்டுள்ளன. ஆன்மீகத்துக்கும் பெயர் பெற்ற மோகனூர் காவிரியில், இது போன்ற செயல்கள் நடைபெறாமல் தடுக்க பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து, விவசாயிகள் சங்க தலைவர் பாலசுப்ரமணியன் கூறுகையில், காவிரி ஆற்றில் தான் மோகனுர் பேரூராட்சி கழிவு பல ஆண்டாக கலக்கிறது. இது பற்றி பல முறை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பேசியும் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது ஈஸ்வரன் கோயில் அருகில் இருந்து சாக்கடை கழிவுநீர் அதிக அளவில் காவிரியில் கலந்து வருகிறது. இந்த தண்ணீரை குடிக்கும் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது என்றார்.

Tags : Mohanur ,canal ,Cauvery , Cauvery
× RELATED மோகனூர் முருகன் கோயிலில் சிறப்பு பூஜை