×

அழகர் கோயில் மற்றும் அதை சுற்றியுள்ள மலைப்பகுதிகள் அனைத்தும் வனத்துறைக்கு சொந்தமானது : உச்சநீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி : மதுரையை அடுத்த அழகர் கோயில் தமிழக வனத்துறைக்கு சொந்தமானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அறநிலையத்துறைக்கு அழகர் கோயில் சொந்தமானது என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

வழக்கின் பின்னணி

மதுரையில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள அழகர்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் நடைபெறும் சித்திரை திருவிழாவின் போது, கள்ளழகர் அழகர் கோவிலில் இருந்து தான் புறப்பட்டு மீனாட்சி கல்யாணத்திற்கு மதுரைக்கு வருவார். அதன் பிறகு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறும். இதனிடையே கடந்த 2014ம் ஆண்டு அழகர் மலை கோயில் இந்து அறநிலையத்துறை சொந்தமானது என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்த தீர்ப்பினை எதிர்த்து வனத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்தது.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததையடுத்து நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இந்நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் அழகர் மலை கோயில் இந்து அறநிலையத்துறை சொந்தமானது என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. அத்துடன் அழகர் கோயில் மற்றும் அதை சுற்றியுள்ள மலைப்பகுதிகள் அனைத்தும் வனத்துறைக்கு சொந்தமானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் அழகர் மலையின் பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதால், மரங்களை அகற்றுதல் போன்ற சட்டவிரோத பணிகளில் ஈடுபட கூடாது என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே உச்சநீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பை எதிர்த்து அறநிலையத்துறை சீராய்வு மனு தாக்கல் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : Alagir Temple ,hills ,Forest Department: Supreme Court ,Alagar Temple ,Forest Hills , Supreme Court, Judgment, Madurai, Forest Department, Department of Justice
× RELATED கால்பந்து, கூடைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு