×

பொதுப்பணித்துறையில் 9 ஆண்டுகளாக தூங்கும் இளநிலை பொறியாளர்கள் பணியிடங்கள் நிரப்பும் சட்ட திருத்தம்: முதன்மை தலைமை பொறியாளர் அரசுக்கு கடிதம்

சென்னை: தமிழக பொதுப்பணித்துறையில் 304 இளநிலை பொறியாளர் பணியிடங்களை நிரப்ப சட்ட திருத்தம் மேற்கொள்ள முதன்மை தலைமை பொறியாளர் அரசுக்கு அவசர கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.தமிழக பொதுப்பணித்துறையில் சட்டத்திருத்தம் செய்யப்படாததால் பதவி உயர்வு, ஓய்வு உள்ளிட்ட காரணங்களால் 304 இளநிலை பொறியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில் முதன்மை தலைமை பொறியாளர் அரசு செயலாளர் மணிவாசகத்துக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், ‘கடந்த 2009 முதல் 2019 வரை 304 இளநிலை பொறியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களுக்கு டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் கல்வி தகுதி கொண்டவர்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

75 சதவீதம் டிஎன்சிபிஎஸ்சி மூலமும், 25 சதவீதம் பதவி உயர்வு மூலமும் நிரப்ப வேண்டும். இதில், பதவி உயர்வு மூலம் தேர்வு செய்யப்படுபவர்கள் ஓராண்டு சிறப்பு பயிற்சி மூலம் நிரப்ப வேண்டும். தற்போது 40 சதவீதம் பணியிடங்களுக்காக தேர்வு நடத்தி நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. எனவே, இதுதொடர்பாக இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு பொறியியல் துணை விதிகளில் சிறப்பு சட்டத் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்த சட்ட திருத்தத்துக்கு ஒப்புதல் கிடைத்தவுடன் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு நடத்தி காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Tags : Junior Engineers ,Chief Chief Engineer ,Government , public works, Junior Engineers,Job, Government
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...