×

கடந்த 3 மாதங்களாக உணவு படி வழங்காததால் சேலம் போலீசார் அதிருப்தி

சேலம்: சேலம் மாவட்டத்தில் 3 மாதமாக உணவு படி வழங்காததால் போலீசார் அதிருப்தி அடைந்துள்ளனர். தமிழ்நாடு காவல்துறையில் போலீசார் முதற்கொண்டு இன்ஸ்பெக்டர்கள் வரை அனைவருக்கும் மாதத்திற்கு 6 நாட்கள் உணவு படி வழங்கப்படுகிறது. இதன்படி மாதம் தோறும், ஒரு நாளைக்கு 250 வீதம் 6 நாட்களுக்கு 1,500 வழங்க வேண்டும். ஆனால், சேலம் மாவட்டத்தில் கடந்த 3 மாதமாக உணவுபடி வழங்காததால், போலீசார் அதிருப்தியில் உள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மாதந்தோறும் சேலம் வருகிறார். கடந்த 2 மாதத்தில் 3 முறை வந்து தங்கிவிட்டார். அவரது வருகையின் போது, பாதுகாப்பு பணிக்காக 300 முதல் 500 போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதுபோக தேவர் ஜெயந்தி விழா, சீன அதிபர் வருகை போன்றவற்றிற்கும் பாதுகாப்பு பணிக்காக மாவட்ட போலீசார் அனுப்பப்பட்டனர். இந்த போலீசாருக்கும், காவல் நிலையங்களில் பணியாற்றும் போலீசாருக்கும் கடந்த 3 மாதமாக உணவுப்படி வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். இருப்பினும் நடப்பு மாதம் முதல் தேதியிலும் உணவு படி வழங்காததால், கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

இதுபற்றி போலீசார் கூறுகையில், ‘‘மற்ற மாவட்டங்களில் போலீசாருக்கு முறையாக மாதந்தோறும் உணவுபடி வழங்குகிறார்கள். ஆனால், சேலம் மாவட்டத்தில் மட்டும் உணவு படி வழங்குவதில், அதிகாரிகள் அக்கறை காட்டுவதில்லை. இதனால், போலீசார் பாதிக்கப்படுகிறோம். முதல்வர் வருகை உள்பட பல்வேறு முக்கிய நிகழ்வுகளுக்கு எவ்வித தயக்கமும் இன்றி பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாரின் நலனில் உயர் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்’’ என்றனர்.


Tags : Salem , Salem police, disgruntled ,lack of food,past 3 months
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...