×

உத்திரமேரூரில் பரபரப்பு நகைக்கடை சுவரில் துளையிட்டு வெள்ளி பொருட்கள் கொள்ளை

* லாக்கரை உடைக்க முடியாததால் தங்க நகைகள் தப்பியது

சென்னை: உத்திரமேரூரில் நகைக்கடை சுவரில் துளையிட்டு அரை கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். லாக்கரை உடைக்க முடியாததால் தங்க நகைகள் தப்பியது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் அடுத்த மாகரல் கிராமத்தை சேர்ந்தவர் நாராயண லால் (48). இவர் உத்திரமேரூர் அடுத்த படூர் கூட்டு சாலையில் நகை மற்றும் அடகு கடை நடத்தி வருகிறார். தினமும் காலையில் கடைக்கு பைக்கில் வந்து விட்டு, இரவில் வீட்டுக்கு திரும்புவது வழக்கம். அதுபோன்று நேற்றுமுன்தினம் காலையில் கடையை திறந்து வியாபாரம் செய்தார். இரவு கடையை பூட்டி விட்டு கோவைக்கு சென்று விட்டார். நேற்று காலையில் கடையை திறக்கும்படி அவரது தம்பியான சத்தாராமிடம் நாராயண லால் கூறியுள்ளார். இதையடுத்து, சத்தாராமும், கடையை திறந்து உள்ளே சென்றார். அங்கு, பின்பக்க சுவர் துளையிடப்பட்டிருந்தது. அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

கடையில் வைத்திருந்த அரை கிலோ வெள்ளி மற்றும் கொலுசு, மோதிரம், மெட்டி உள்ளிட்ட  பொருட்கள் கொள்ளை போனது. தங்க நகைகள் வைத்திருந்த லாக்கரை திறக்க முடியாததால், நகைகள் தப்பியது. இதுகுறித்து உத்திரமேரூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. நாராயண லாலுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.  இதையடுத்து கைரேகை நிபுணர், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் சிறிது தூரம் சென்றுவிட்டு நின்றுவிட்டது.  இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Loot of silver items ,pierced , Uttarameru
× RELATED தகாத உறவு விவகாரத்தில் இளம்பெண்...