அமைச்சர் விஜயபாஸ்கர் மாவட்டத்தில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல்: சோம்பிக் கிடக்கும் சுகாதாரத்துறை

மணமேல்குடி: புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் அரசு மருத்துவமனை உள்ளது. தினமும் 500க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும், புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது மணமேல்குடி பகுதிகளில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக குவிந்து வருகின்றனர். ஆனால் அரசு மருத்துவமனையில் இரண்டு மருத்துவர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். தற்போது அதிகமான மக்கள் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த காய்ச்சலை தொடர்ந்து சிலருக்கு வாந்தி ஏற்பட்டு உடலில் தண்ணீர் சத்து குறைகிறது. காய்ச்சல் ஒரு வாரம் முதல் ஒரு மாதம் வரை குணமாகாமல் இருக்கிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மணமேல்குடிக்கு வரும் நோயாளிகளை மருத்துவர்கள் அறந்தாங்கி அரசு மருத்துவமனை அல்லது புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்கின்றனர். அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் போதிய படுக்கை வசதி இல்லை. ஒரே படுக்கையில் 2 நோயாளிகளை படுக்க வைத்து குளுக்கோஸ் ஏற்றப்படுகிறது. மேலும் குளுக்கோஸ் ஸ்டாண்ட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் நீளமான கயிற்றை கட்டி அதன் மூலம் குளுக்கோஸ் பாட்டில் தொங்கவிடப்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

அரசு மருத்துவமனையில் கழிவறை உள்ளிட்ட சில பகுதிகள் அசுத்தமாக இருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கடியால் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இரவு நேரங்களில் மின்வெட்டு ஏற்படுவதால் மருத்துவமனை இருளில் மூழ்கிக் கிடக்கிறது. புழுக்கம் மற்றும் கொசுக்கடியால் நோயாளிகளும், உறவினர்களும் அவதிப்பட்டுவருகின்றனர். எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு போதிய மருத்துவர்களை நியமித்தும், செவிலியர்கள், லேப் டெக்னீசியன் போன்ற மருத்துவ பணியாளர்களை போதிய அளவில் நியமித்தும், சிகிச்சைக்காக வரும் உள் நோயாளிகளுக்கு புதிதாக படுக்கை வசதிகளை அமைத்து, ரத்த தட்டணுக்கள் குறைந்தாலும் இங்கேயே சிகிச்சை பெறும் அளவிற்கு மருத்துவ சிகிச்சை முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.

மேலும் சுகாதார குழுவினரை அனுப்பி மணமேல்குடி பகுதி முழுவதும் காய்ச்சலை தடுக்க சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டு வருவாதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறி வந்தாலும், அவருடைய சொந்த மாவட்டத்தில் ஏராளமானோர் மர்ம காய்ச்சலால், வாந்தி உள்ளிட்ட பிரச்னைகளால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

லேப் டெக்னீசியனுக்கு காய்ச்சல்

மணமேல்குடி அரசு ஆஸ்பத்திரியில் ரத்த அணுக்கள் பரிசோதனை செய்ய லேப் டெக்னீசியன் ஒருவர் மட்டுமே பணியில் உள்ளார். அவரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு விடுமுறையில் இருப்பதால் ரத்த அணுக்கள் பரிசோதனை செய்ய முடியாமல் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

Related Stories:

>