×

மூணாறில் பீதியைக் கிளப்பும் மலைச்சாலை: தடுப்புச்சுவர் இல்லாததால் தொடர்கிறது விபத்து

மூணாறு: மூணாறில் கொச்சி- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில்  போடிமெட்டு  முதல் தமிழ்நாடு வரை செல்லும்  சாலையில் தடுப்புச்சுவர் இல்லாததாலும், எந்நேரம் வேண்டுமானாலும் சாலைகளில் சரிந்து விழும் பாறைகளாலும் வாகன ஓட்டிகள் பீதியில் உள்ளனர். மூணாறில் கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் கேரள-தமிழ்நாட்டை பிரிக்கும் எல்லையாக போடிமெட்டு பகுதி உள்ளது. இப்பகுதியிலிருந்து தமிழகத்திற்கு செல்லும் 20 கி.மீ மலைகளில்  சாலைகள் வாகன ஓட்டுனர்களுக்கு இடையை திக் திக் நிமிடங்களாக மாறி வருகிறது. பெரிய மலைகளுக்கு இடையை கீழ்நோக்கி அமைந்திருக்கும் சாலைகளின் ஒருபுறம் 100 அடி அளவிலான பள்ளங்கள் மற்றும் 18 கொண்டை ஊசி வளைவுகள் நிறைந்தது. இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள சாலைகளில் இடது பக்கம் பாதுகாப்பு சுவர்கள் கட்டப்படவில்லை. மேலும் மூடுபனி ஏற்படும் நேரங்களில்  பெரிய வளைவுகள் இருப்பது மட்டுமே வாகன ஓட்டிகளுக்கு தெரியும். இதனால் இச்சாலையில் பயணம் செய்ய வாகன ஓட்டிகள் பெரும் அச்சம் கொள்கின்றனர்.

பாதுகாப்பு சுவர்  இல்லாத காரணத்தால் சாலைகளில் உள்ள ஆபத்தான வளைவுகள்  விபத்துகள் ஏற்பட்டு, உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த தொழிலாளியின்  வாகனம் வளைவுகளில் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாலையில்   விபத்துக்குள்ளான ஒரு வாகனத்தை இதுவரை பள்ளத்தில் இருந்து எடுக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
அத்துடன் இரவு நேரங்களில் கூடுதலாக  விபத்து அதிகம் ஏற்படுகிறது. கடும் மூடுபனி மற்றும் மழைக்காலங்களில் சாலைகள் பார்க்க முடியாத நிலைக்கு வாகன ஓட்டுனர்கள் தள்ளப்பட்டு சிரமத்திற்கு உள்ளாகி  வருகின்றனர். மேலும் மழைக்காலங்களில் இந்த சாலையில் பாறைகள், கற்கள் உருண்டு விழுவதன் மூலம் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. குறிப்பிட்ட இந்த சாலைகளில் இரவு நேரங்களில் நிகழும் விபத்துகள் அடுத்தநாள் காலையில் தான் வெளியுலகத்திற்கு தெரிய வருகிறது.

இதன் காரணமாக உயிர்பலி அதிகமாகி வருகிறது. எனவே, இந்த சாலைகளில் பாதுகாப்பு தடுப்புச்சுவர்கள் மற்றும்  மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சுற்றுலாப்பயணிகள் கூறுகையில்,`` மூடுபனி அழகை ரசிக்கவும், இங்கு நிலவும் இயற்கை சூழலை ரசிக்கவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மூணாறில் இருந்தும்,  தமிழ்நாட்டில் இருந்தும் இங்கு வருகின்றனர். இவ்வாறு வரும் பயணிகளுக்கு தகுந்த பாதுகாப்பு இல்லாத காரணத்தால் ஆபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எந்த நேரத்திலும் சாலைகளில் சரிந்து விழும் பாறைகள் மூலம் அச்சம் ஏற்படுகிறது. எனவே, கேரள - தமிழ்நாடு அரசுகள் முன்வந்து  இச்சாலையில் பாதுகாப்பு தடுப்புச்சுவர் அமைத்து பயணிகளை பாதுகாக்க வழிவகை செய்ய வேண்டும்’’ என்று கூறினார்.

Tags : Panoramic Highway ,Munnar , Munnar
× RELATED மாட்டுப்பட்டி அணையில் பேட்டரி படகு சவாரி: சுற்றுலாப்பயணிகள் ஆர்வம்