×

அதிகரித்து வரும் காலி பணியிடங்களால் திட்ட அறிக்கை தயாரிக்க தாமதம்

* பொதுப்பணித்துறை பணிகள் முடங்கும் அபாயம்
* முதன்மை தலைமை பொறியாளருக்கு கோட்ட செயற்பொறியாளர்கள் கடிதம்

சென்னை: காலி பணியிடங்கள் அதிகரித்து வருவதால் பல்வேறு திட்டப்பணிகளுக்கு அறிக்கை தயாரிப்பது உள்ளிட்ட பல பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் வளர்ச்சி பணிகள், பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணியில் தொய்வு  ஏற்பட்டுள்ளது. இது குறித்து முதன்மை தலைமை பொறியாளருக்கு கோட்ட செயற்பொறியாளர்கள் கடிதம் எழுதி உள்ளனர். தமிழக பொதுப்பணித்துறையில் கட்டுமானம் மற்றும் நீர்வளப்பிரிவு உள்ளது. இதன் மூலம் அரசு துறைகளுக்கு தேவையான கட்டிடங்கள் கட்டுதல் மற்றும் பராமரிப்பு பணிகள், அணை, ஏரிகள் புனரமைத்தல், தடுப்பணை கட்டுதல் உள்ளிட்ட  பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் ரூ.4 ஆயிரம் கோடி நிதி அறிவிக்கப்படுகிறது. இந்த திட்டப்பணிகளுக்கு அறிக்கை தயார் செய்து அரசின் ஒப்புதல் பெற வேண்டும். அதன்பிறகே அரசு சார்பில்  இந்த பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய முடியும். ஆனால், பொதுப்பணித்துறையில் இளநிலை உதவியாளர், உதவியாளர், கண்காணிப்பாளர், உதவி பொறியாளர், உதவி செயற்பொறியாளர், செயற்பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர் பணியிடங்கள் பெரும்பாலானவை காலியாக உள்ளது.  குறிப்பாக, 650 உதவி பொறியாளர், 900 இளநிலை பொறியாளர், 279 உதவி செயற்பொறியாளர், 116 செயற்பொறியாளர் என பல்வேறு நிலைகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளது.

இதனால், பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு அவர்கள் மூலம் அறிக்கை தயாரிப்பது உள்ளிட்ட பல பணிகளை முடிப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் வளர்ச்சி, பராமரிப்பு மற்றும் கண்காணிப்பு  பணிகளில் தொய்வு ஏற்பட்டு பொதுப்பணித்துறையே முடங்கும் நிலையில் உள்ளது.இந்த நிலையில் செயற்பொறியாளர்கள் சிலர் முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்திக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளனர். அதில், ‘காலி பணியிடங்கள் மற்றும் கூடுதல் பொறுப்பால் தலைமை பொறியாளர் மற்றும் கண்காணிப்பு பொறியாளருக்கான கடிதப்போக்குவரத்துகள் மற்றும் பட்ஜெட், திருத்தியமைக்கப்பட்ட பட்ஜெட் இவைகளுக்கான உரிய பதில் உடனுக்குடன்  கொடுக்க முடியவில்லை. மேலும், மாவட்ட கருவூலத்தில் ஒத்திசைவு சரியான கால நேரத்தில் சரி செய்யப்பட முடியாததால் ஏஜி பெண்டிங் பாரா ஏற்படும் நிலை உள்ளது. காலி பணியிடங்களால் பல்வேறு திட்டப்பணிகளுக்கு அறிக்கை  தயாரிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே, கூடுதலாக ஊழியர்களை பணியமர்த்த வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : Delay , producing , increasing, vacancies
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...