×

ரூ6 லட்சம் மோசடி வழக்கில் தலைமை செயலக பெண் ஊழியர் உள்பட 2 பேர் கைது: சைரன் வைத்த கார் பறிமுதல்

தண்டையார்பேட்டை: தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ6 லட்சம் மோசடி செய்த தலைமை செயலக பெண் ஊழியர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். கோயம்பேடு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் என்ற கணேசன் (48). தனியார் நிறுவன ஊழியர். இவர், சென்னை கோட்டை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அதில், கொருக்குப்பேட்டையை சேர்ந்த குணசேகரன் (35) என்பவர், என்னிடம் ரூ4 லட்சம் கடன் வாங்கினார். ஆனால், அதை திருப்பி தராமல் ஏமாற்றிவிட்டார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுத்து, எனது பணத்தை மீட்டுத்தர வேண்டும், என தெரிவித்திருந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் தலைமை செயலகம் அருகே கோட்டை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக ைசரன் வைத்து, அரசு சின்னத்துடன் வந்த காரை, சந்தேகத்தின்பேரில் போலீசார் மடக்கி சோதனை செய்தனர்.

அப்போது, கார் நம்பர் பிளேட்டில் இருந்த நம்பரும், வாகன ஆவணத்தில் இருந்த நம்பரும் வேறு வேறாக இருந்தது. இதையடுத்து காரை ஓட்டிவந்த கொருக்குப்பேட்டை கண்ணன் தெருவை சேர்ந்த குணசேகரன் (35) என்பவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில், குணசேகரன் கருத்துவேறுபாடு காரணமாக தனது மனைவியை பிரிந்து, எம்கேபி நகர் பகுதியை சேர்ந்த புஷ்பலதா (39)  என்பவருடன் வசித்து வருவது தெரியவந்தது. புஷ்பலதா தலைமை செயலகத்தில் உள்ள ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறையில் பதிவு எழுத்தராக வேலை செய்து வருவதும், காரின் உரிமையாளர் புஷ்பலதா என்பதும் தெரியவந்தது. மேலும், விசாரணையில் கோயம்பேட்டை சேர்ந்த ராஜேஷிடம் குணசேகரன் ரூ4 லட்சம் வாங்கி மோசடி செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, குணசேகரனை போலீசார் கைது செய்தனர். மேலும், கோயம்பேடு பூ மார்க்கெட்டை சேர்ந்த நிவேந்திரன் (23)  என்பவர்,  புஷ்பலதாவும் - குணசேகரனும்  தன்னிடம் ரூ2 லட்சம் வாங்கி மோசடி செய்தனர், என்று புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில், புஷ்பலதாவையும் போலீசார் கைது செய்தனர். பின்னர், இவர்கள் இருவரையும் ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : chief secretary ,Siren ,chief secretariat employee , Fraud, female employee, 2 arrested
× RELATED தடையின்றி மின்சாரம்: தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை