×

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் ரூ6 கோடியில் சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டம்: கழிவுநீர் சுத்திகரிப்பு, மழைநீர் சேகரிப்பு செயல்படுத்த முடிவு

சென்னை: வண்டலூர்  அடுத்துள்ள கிளாம்பாக்கத்தில் அமைய உள்ள புதிய பேருந்து நிலையத்தில் ரூ6 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டம் செயல்படுத்தபட உள்ளது. ஆசியாவில் மிகப்பெரிய பேருந்து நிலையமான கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புறநகர், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு ஆயிரக்கணக்கான பேருந்துகள் தினசரி இயக்கப்படுகின்றன. இந்த பேருந்து நிலையம் நகரத்தின் மைய பகுதியில் அமைந்துள்ளதால் தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக, தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்து வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர் .இதைத் தவிர்க்க பண்டிகை காலங்களில் புறநகர் பகுதியிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இந்நிலையில் சென்னையில் அதிகரித்து வரும் நெரிசலை குறைக்கும் வகையில், வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் ஜிஎஸ்டி சாலையோரம் புதிய பேருந்து நிலையம் அமைக்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் முடிவு செய்தது. இதன்படி 44.74 ஏக்கரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கபடவுள்ளது. ரூ393 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள இந்த பேருந்து நிலையத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டினார். இந்த பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் 250 பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும். இதுதவிர 350 கூடுதல் பஸ்கள் நிறுத்துவதற்கும் இடவசதி ஏற்படுத்தப்படுகிறது. இதைத்தவிர்த்து 300 கார் மற்றும் 3500 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் ‘பார்க்கிங்’ வசதியும் உருவாக்கப்பட உள்ளது.

இந்நிலையில் இந்த பேருந்து நிலைய கட்டுமான பணிக்கு சுற்றுச்சூழல் தடையில்லா சான்று வழங்கோரி தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திற்கு சிஎம்டிஏ சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது. இந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட ஆணையம் சமீபத்தில் சுற்றுச்சூழல் தடையில்லா சான்று வழங்கியுள்ளது. இந்த ஆவணத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ரூ6 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டம் ஏற்படுத்தபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்தவுடன் நாள் ஒன்றுக்கு 628 கேஎல்டி தண்ணீர் தேவை என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நீரை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்த 670 கேஎல்டி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ரூ4.80 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ளது.  அதைப்போல், நாள் ஒன்றுக்கு 2241 கிலோ திடக்கழிவு உற்பத்தியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

இவற்றை மறுசுழற்சி செய்ய ரூ50 லட்சம் செலவு செய்யப்படவுள்ளது. இதை தவிர்த்து பசுமை பணிகளுக்கு ரூ10 லட்சம், எல்இடி மற்றும் சோலார் விளக்குகள் அமைக்கும் பணிக்கு ரூ13 லட்சம், மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்த ரூ86 லட்சம் செலவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை பராமரிக்க ஒவ்வொரு ஆண்டும் ₹65 லட்சம் செலவாகும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை கண்காணிக்க சுற்றுச்சூழல் கண்காணிப்பு பிரிவும் உருவாக்கப்படவுள்ளது. இந்த குழுவானது காற்றின் தரம், தண்ணீர் தரம், மழைநீர் வடிகால் பராமரிப்பு, பசுமை பரப்பு பராமரிப்பு, திடக்கழிவு மேலாண்மை ஆகிய பணிகளை தினசரி கண்காணித்து அதில் குறைகளுக்கு உடனடியாக தீர்வு காணும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Klampakkam New Bus Stand Klampakkam New Bus Stand , Clampakkam, New Bus Stand
× RELATED முதலீட்டு பணத்திற்கு 10 முதல் 11% வட்டி...