×

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளையும் இணைத்து புதிய எல்லையுடன் இந்திய வரைபடம் : மத்திய உள்துறை அமைச்சகம் வெளியீடு

புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பிறகு, அதிகாரப்பூர்வமான இந்திய வரைபடத்தை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்து மத்திய அரசு கடந்த ஆக.5ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவு மாற்றியமைக்கப்பட்டது. யூனியன் பிரிப்பு கடந்த 31ம் நள்ளிரவு அமலுக்கு வந்தது. புதிய யூனியன் பிரதேசங்கள் செயல்பாட்டுக்கு வந்தபிறகு, இந்தியாவில் மொத்தம் 28 மாநிலங்களும் 9 யூனியன் பிரதேசங்களும் இருக்கின்றன.இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகம் இந்தியாவின் அதிகாரப்பூர்வ புதிய அரசியல் வரைபடத்தை வெளியிட்டிருக்கிறது. கடந்த 1947ம் ஆண்டுக்குப் பிறகு, இந்தியாவின் வரலாற்றில் முதல் முறையாக ஒரு மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகியவற்றுடன் இந்தியா முழுவதும் 9 யூனியன் பிரதேசங்கள் உள்ளன. மாநிலங்களின் எண்ணிக்கை 28 ஆகக் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலமாக 1947ல் அறிவிக்கப்பட்ட போது, கதுவா, ஜம்மு, உதம்பூர், ரியாசி, அந்த்நாக், பாரமுல்லா, பூஞ்ச், மிர்பூர், முஸாஃபராபாத், லே, லடாக், கில்ஜித், கில்ஜித் வஸாரத், சில்ஹஸ் உள்ளிட்ட 14 மாவட்டங்கள் இருந்தன.இந்த ஆண்டில் குப்வாரா, பந்திபூர், கந்தர்பால், ஸ்ரீநகர், பட்காம், புல்வாமா, குல்காம், சோபியான், ரஜெளரி, ராம்பன், கிஷ்த்வார், சம்பா, கார்கில் உள்ளிட்ட மாவட்டங்கள் புதிதாக உதயமாகின. தற்போது மொத்தம் 28 மாவட்டங்கள் உள்ளன. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும், லடாக் யூனியன் பிரதேசத்தில் கில்ஜித்-பல்டிஸ்தானும் இடம்பெற்றுள்ளன. அக்சாய் சின் மற்றும் கில்ஜித்-பல்டிஸ்தான் ஆகிய பகுதிகளை சீனா நிர்வகித்து வருகிறது. இந்நிலையில், அந்தப் பகுதிகளை புதிய வரைபடத்தில் சேர்த்து அவை இந்தியாவுக்கு சொந்தமானது என்பதை சீனாவுக்கு மத்திய அரசு தெரிவித்துள்ளது. லடாக்கை யூனியன் பிரதேசமாக அறிவித்ததன் மூலம் கடுமையான சவால்களை இந்தியா எதிர்கொள்ள நேரிடும் என்று சீனா எச்சரித்திருந்தது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தலைநகரான முஸாபராபாத் புதிய வரைபடத்தில் இடம்பெற்றுள்ளது.

Tags : Indian ,Union Home Ministry ,border ,Pakistan ,Kashmir ,release , Indian map ,Pakistan's new border,occupied Kashmir, Union Home Ministry
× RELATED நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சக...