×

சிவசேனாவின் அரசியல், பாஜக போல் இல்லை: மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சியமைக்க சோனியா காந்திக்கு காங்கிரஸ் எம்.பி கடிதம்

டெல்லி: மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜனதாவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 இடங்களும் கிடைத்தன. ஆட்சியமைக்க இந்த கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் உள்ள போதிலும், சிவசேனாவின் நிலைப்பாட்டால்  மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைவதில் இழுபறி நீடித்து வருகிறது. இரண்டரை  ஆண்டுகளுக்கு சுழற்சி முறையில் இருகட்சிகளுக்கும் முதல்வர் பதவி, அமைச்சரவையில் சமபங்கு ஆகிய கோரிக்கையை சிவசேனா திடமாக வலியுறுத்தி  வருகிறது.

ஆனால், இதை ஏற்க பா.ஜனதா மறுத்து விட்டது. சிவசேனாவுக்கு துணை முதல்வர் பதவியுடன், 15 அமைச்சர் பதவிகள் ஒதுக்க தயாராக இருப்பதாக பா.ஜனதா தரப்பில் தெரிவிக்கப்பட்ட திட்டத்தையும் சிவசேனா ஏற்க மறுத்து விட்டது. இந்த   நிலையில், பா.ஜனதாவை கழற்றி விட்டுவிட்டு தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆதரவுடன் புதிய அரசு அமைப்பதற்கான முயற்சியில் சிவசேனா ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக சிவசேனா மூத்த தலைவர்களில் ஒருவரும் உத்தவ்   தாக்கரேயின் நம்பிக்கைக்குரியவருமான சஞ்சய் ராவுத் கடந்த சில நாட்களுக்குமுன் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை அவரது வீட்டில் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின் போது பா.ஜனதாவுக்கு மாற்றாக சிவசேனா தலைமையில் புதிய கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிவசேனாவின் இந்த முயற்சிக்கு மகாராஷ்டிரா  மாநில காங்கிரஸ் தலைவர் பாலாசாகேப் தோரத், முன்னாள் முதல்வர்கள் அசோக் சவான், பிருத்விராஜ் சவான் போன்ற தலைவர்களும் சாதகமாக இருப்பதாக கூறப்படுகிறது. சிவசேனாவின் திட்டம் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியாவை  சந்தித்து ஆலோசனை நடத்துவதற்காக பாலாசாகேப் தோரத் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் தற்போது டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திற்கு , அக்கட்சியின் எம்.பி.,ஹுசேன் தல்வாய் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், பிரதீபா பாட்டில், பிரனாப் முகர்ஜி ஆகியோர் ஜனாதிபதி பதவிக்கு வருவதற்கு  சிவசேனா ஆதரவளித்தது நினைவுகூறத்தக்கது. சிவசேனாவின் அரசியல், பாரதிய ஜனதா கட்சியை போல் இல்லாமல் வேறு விதமாக உள்ளது. பாஜகாவை அதிகாரத்திற்கு வெளியே வைக்கவேண்டுமெனில் நாம் சிவசேனாவை ஆதரிக்க  வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரசில் எதிர்ப்பு:

சிவசேனா தலைமையில் புதிய ஆட்சியமைய காங்கிரஸ் ஆதரவளிக்க மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான சுஷில்குமார் ஷிண்டே, மும்பை காங்கிரஸ் முன்னாள் தலைவர் சஞ்சய் நிரூபம் ஆகியோர் கடும் எதிர்ப்பு  தெரிவித்துள்ளனர். சுஷில்குமார் ஷிண்டே நேற்று கூறுகையில், ‘‘மக்கள் அளித்த தீர்ப்புக்கு மரியாதை அளித்து எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து பணியாற்ற காங்கிரஸ் தயாராக உள்ளது. சிவசேனாவுக்கு ஆதரவளிக்கும் எந்த முடிவையும்  காங்கிரஸ் தலைமை எடுக்காது என்று நம்புகிறேன்’’ என்றார். சஞ்சய் நிரூபம் கூறுகையில், ‘‘பா.ஜனதாவும் சிவசேனாவும் பொய்யான ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகின்றன. ஆசை வார்த்தைக்கு காங்கிரஸ் மயங்கி விடக்கூடாது’’ என்றார்.

Tags : BJP ,Congress ,Shiv Sena ,Sonia Gandhi ,coalition ,Maharashtra , Politics of Shiv Sena not like BJP: Congress MP writes to Sonia Gandhi to rule coalition in Maharashtra
× RELATED மக்களிடம் பயமுறுத்தும் வகையில் பாஜ...