×

அந்தமான் கடல்பகுதியில் புதிய காற்றழுத்தம் தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தம் உருவாக வாய்ப்புள்ளதால் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 17ம் தேதி தொடங்கியது. அன்று முதல் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் குமரிகடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை மகா புயலாக மாறியது. இந்த புயலால் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. இந்த மழை காரணமாக தமிழகத்தில் உள்ள அணைகள், ஏரிகள் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

இதில், குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் மேட்டூர், பவானிசாகர் உள்ளிட்ட 8 அணைகள் நிரம்பி வருகிறது. இந்த அணைகளில் இருந்து வெள்ள நீர் ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. மற்ற அணைகளில் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், மகா புயல் மேற்கு நோக்கி நகர்ந்து விட்டது. இது தற்போது குஜராத் கடற்கரைக்கு 610 கி.மீ தெற்கிலும், கோவாவிலிருந்து 410 கி.மீ மேற்கிலும் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு, வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து கிழக்கு மத்திய அரபி கடலை அடைய வாய்ப்புள்ளது. இதனால், கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் மழை படிப்படியாக குறைந்தது.

இந்நிலையில் அந்தமான் கடல்பகுதியில் நவம்பர் 3ம் தேதி காற்றழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதனால், தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் நேற்று திருவாரூரில் 3 செ.மீ, நிலக்கோட்டை, உத்தமபாளயைம், திருவண்ணாமலை தலா 2 செ.மீ, வேலூர், திருப்பத்தூர், ஏற்காடு, நன்னிலம், கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Tags : Andaman Sea ,Tamil Nadu: Meteorological Department New ,Tamil Nadu: Meteorological Department , New wind in Andaman Sea likely to cause heavy rainfall again in Tamil Nadu: Meteorological Department
× RELATED நிவர், புரேவி புயலைத் தொடர்ந்து...