×

வடகிழக்கு பருவமழையின்போது எடுக்க வேண்டிய தொற்றுநோய், காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வுக்கூட்டம்: ரிப்பன் மாளிகையில் நடந்தது

சென்னை: வடகிழக்கு பருவ மழையின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் தொற்று நோய், காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது. இதில், ஆப்த மித்ரா திட்டத்தின் கீழ் ₹5000 மதிப்புள்ள பேரிடர் மீட்பு உபகரணங்கள் மற்றும் சான்றிதழ்களை அமைச்சர்கள் வழங்கினர். சென்னை மாநகராட்சி, சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்குட்பட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழையின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் தொற்றுநோய், காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று ரிப்பன் மாளிகையில் நடந்தது. நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி  மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,  மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் வருவாய், பேரிடர் மேலாண்மை  மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை வகித்தனர். கூட்டத்தில், வடகிழக்குப் பருவமழையின் போது ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை பாதுகாப்பது குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய நிவாரணப் பணிகள் குறித்தும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆய்வு மேற்கொண்டார். மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்களிடம் பருவமழையின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும், மழைநீர் வடிகால்வாய்களில் தூர்வாரும் பணிகள், சிறு பராமரிப்பு, மழைநீர் வடிகால் பணிகள், அடையாறு மற்றும் கூவம் வடிநிலப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள், கோவளம் வடிநிலப்பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். குறிப்பாக, சென்னை மாநகராட்சியில் ரூ.445 கோடி மதிப்பீட்டில் 171 கி.மீ. நீளத்திற்கான மழைநீர் வடிகால் பணிகளை நவம்பர் 30ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று அமைச்சர் உத்தரவிட்டார். மேலும் ரிப்பன் மாளிகையில் 24X7 மணிநேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகள் குறித்தும், சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் இயங்கும் 24 மணிநேர சிறப்பு குறை தீர்க்கும் மையத்தின் செயல்பாடு குறித்தும் கேட்டறிந்து, மையங்களுக்கு வரும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கவும், தவறும் அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் வேலுமணி எச்சரித்தார். மேலும், பருவமழை காலங்களில் பொதுமக்களுக்கு தொற்றுநோய் மற்றும் காய்ச்சல் ஏற்படாதவண்ணம் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள புகைப்பரப்பும் இயந்திரங்கள், கொசு ஒழிப்பு பணிக்கு போதுமான அளவிற்கு பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள், கொசு ஒழிப்பிற்கு தேவையான பைரித்ரம், டெமிபாஸ் மற்றும் பிளீச்சிங் பவுடர் போதுமான அளவு இருப்பு வைத்துக் கொள்ளவும், பொதுமக்களுக்கு சிறப்பான மருத்துவ சிகிச்சைகளை அளிக்க சிறப்பு மருத்துவ முகாம்களை ஆங்காங்கே நடத்திட மருத்துவ குழுக்கள் தயார்நிலையில் இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

பருவமழை காலங்களில் வெள்ளம், புயல் உள்ளிட்ட பேரிடர்கள் ஏற்படும் போது மீட்புப்பணிகளில் ஈடுபடுவது தொடர்பாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 200 தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு தமிழ்நாடு கமாண்டோ பள்ளி மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த தன்னார்வலர்களுக்கு தேசிய பேரிடர் மேலாண்மைத்துறையின் ஆப்த மித்ரா திட்டத்தின் கீழ் ₹5000 மதிப்புள்ள பேரிடர் மீட்பு உபகரணங்கள் மற்றும் சான்றிதழ்களை அமைச்சர்கள் வேலுமணி, உதயகுமார் வழங்கினர்.
நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், அரசு முதன்மைச் செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Tags : Flu Prevention Labs ,Northeast Monsoon ,Ribbon House ,Influenza Prevention Lab: Ribbon House , Northeast Monsoon, Laboratory, Ribbon House
× RELATED போக்குவரத்து சிக்னல்களில்...