×

திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்: லட்சக்கணக்கான பக்தர்கள் குவிகின்றனர்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நடக்கிறது. இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். அறுபடை வீடுகளில் இரண்டாவது படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 28ம் தேதி தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை 4.30  மணிக்கு மேல் திருச்செந்தூர் கடற்கரையில் நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு  உச்சிக்கால அபிஷேகம், மதியம் 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.
மாலை 4.30 மணிக்கு மேல் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரனை வதம் செய்கிறார். தொடர்ந்து சந்தோஷ மண்டபத்தில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது. அதன்பின் சுவாமியும்,  அம்பாளும் புஷ்ப சப்பரத்தில் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து 108 மகாதேவர் சன்னதி முன்பு சாயாபிஷேகம் நடைபெறும்.

7ம் திருநாளான நாளை  அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், உதயமார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் மற்ற கால பூஜைகள் நடக்கின்றன. அதிகாலை 5 மணிக்கு தெய்வானை  தபசுக்காட்சிக்கு எழுந்தருளுகிறார். மாலை 6 மணிக்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் மாலை மாற்றும் நிகழ்ச்சி தெற்கு ரதவீதி, மேலரதவீதி சந்திப்பில் நடக்கிறது. இரவு சுவாமிக்கும், தெய்வானைக்கும்,  முருகன் கோயிலில் திருக்கல்யாணம் நடக்கிறது. சூரசம்ஹார நிகழ்ச்சியைக்காண தமிழகம், வெளிமாநிலம், வெளிநாடு ஆகியவற்றில் இருந்து  லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதையொட்டி, 3500 போலீசார் பாதுகாப்பு பணியில்  ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Tags : Thiruchendur ,Suraksharaham ,Millions ,devotees , Thiruchendur, Surasamhamram
× RELATED பள்ளிகள் விடுமுறையையொட்டி...