×

பெரம்பூர் தணிகாசலம் நகரில் உயிர் பலி வாங்கும் சாலை பள்ளங்கள் : அதிகாரிகள் மெத்தனம்

பெரம்பூர்: பெரம்பூர் தணிகாசலம் நகரில் மாநகராட்சி சார்பில் பல இடங்களில் தோண்டப்பட்ட பள்ளங்களை மூடாததால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அடிக்கடி தவறி விழுந்து விபத்தில் சிக்குவது தொடர்கதையாக உள்ளது. சென்னை மாநகராட்சி, 6வது மண்டலம், 69வது வார்டுக்கு உட்பட்ட பெரம்பூர் தணிகாசலம் நகரில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. அதுமட்டுமின்றி ஏராளமான வர்த்தக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்டவை அமைந்துள்ளன. இங்குள்ள தெருக்களில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்கள் ஆங்காங்கே சிதலமடைந்து காணப்பட்டது.
இதனால், மழைக்காலங்களில் நீரோட்டம் தடைபட்டு, மழைநீருடன் கழிவுநீர் கலந்து தெருக்களில் தேங்கியது. எனவே, இந்த கால்வாய்களை சீரமைக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, கடந்த 15 நாட்களுக்கு முன், மாநகராட்சி ஊழியர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் சிதிலமடைந்த கால்வாயை உடைத்து, அடைப்புகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே, தீபாவளி விடுமுறை வந்ததால், பணிகளை நிறுத்திவிட்டனர். ஆனால், 15 நாட்களாகியும் இதுவரை எந்த பணியும் நடைபெறவில்லை. இதனால், அங்குள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்கு செல்பவர்கள், கால்வாய் பள்ளத்தின் மீது மரப்பலகை வைத்து ஆபத்தான முறையில் செல்கின்றனர்.

இவ்வாறு செல்லும்போது, முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் தவறி கால்வாயில் விழும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த கால்வாய் பள்ளத்தில் உயர் அழுத்த மின் கம்பிகள் கிடப்பதால், மின் கசிவு அபாயம் உள்ளது. அதுமட்டுமின்றி, இவ்வழியே செல்லும் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் இந்த கால்வாய் பள்ளத்தில் அடிக்கடி விழுந்து காயமடைந்து செல்கின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் இவ்வழியே செல்வோர் மிகுந்த அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘சாலையோர கால்வாயை மாநகராட்சி ஊழியர்கள் உடைத்ததால் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், பாதசாரிகள், வாகன ஓட்டிகள் சிரமத்துடன் செல்லும் நிலை உள்ளது. பலர் இந்த கால்வாய் பள்ளத்தில் தவறி விழுவதால், உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

தற்போது, இந்த பள்ளத்தில் கழிவுநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த ஒரு வாரமாகவே பொதுமக்களுக்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதுகுறித்து பலமுறை மாநகராட்சி  அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். தற்போது, அடிக்கடி மழை பெய்வதால், சாலையோரம் உள்ள பள்ளம் தெரியாத அளவுக்கு நீரில் மூழ்கி விடுகிறது. இதனால், பொதுமக்கள் தவறி விழுந்து பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் உள்ளது.  எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.  

பொறுப்பற்ற பதில்

தணிகாசலம்  நகரில் கடந்த 15 நாட்களுக்கு முன் தோண்டிய கால்வாய் பள்ளத்தை சீரமைக்க கோரி இப்பகுதி மக்கள், மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் முறையிட்டபோது, பொக்லைன் டிரைவர் ஊருக்கு சென்று உள்ளார். அவர் எப்போது ஊரிலிருந்து வருவாரோ அப்போது தான் பள்ளத்தை சீரமைக்க முடியும். தற்போது ஆட்கள் பற்றாக்குறையாக உள்ளது, என அலட்சிய போக்குடன் பதிலளித்துள்ளார். தற்போது மழைக்காலம் என்பதால், இந்த சாலையோர பள்ளத்தால் உயிர்பலி ஏற்படும் அபாயம் உள்ள நிலையில், அதிகாரிகளின் இதுபோன்ற பொறுப்பற்ற செயல், பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Tags : city , Road ditches, Perambur Thanikasalam city, Officials cunning
× RELATED ஊட்டி நகர் பகுதியில்...