×

திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்துக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அவசியம் இல்லை : எய்ம்ஸ் மருத்துவர் குழு அறிக்கை

புதுடெல்லி: ‘டெல்லி திகார் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், நலமாக இருக்கிறார். அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியம் இல்லை,’ என்று எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு அறிக்கை அளித்துள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை சிபிஐ கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்து விசாரித்தது. நீதிமன்ற உத்தரவின் பேரில் திகார் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் சமீபத்தில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இருப்பினும், இதே முறைகேடு வழக்கில் நிதி மோசடி சம்பந்தப்பட்ட குற்றத்துக்காக அமலாக்கத் துறை அவரை கைது செய்ததால், தொடர்ந்து சிறையில் இருந்து வருகிறார். இந்நிலையில், குடல் அழற்சி நோயால் சிதம்பரம் அவதிப்பட்டு வருகிறார். தனது உடல் நிலை மோசமாக இருப்பதால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவதற்காக இடைக்கால ஜாமீன் வழங்கும்படி டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவர்  மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை நேற்று முன்தினம் விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், சிதம்பரத்தின் உடல்நிலையை பரிசோதித்து அறிக்கை அளிக்கும்படி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழுவுக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கு, டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சுரேஷ் கெயிட் முன்னிலையில் நேற்று மீ்ண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு அளித்த அறிக்கை சமர்பிக்கப்பட்டது. அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடுகையில், ‘‘ப.சிதம்பரத்தின் உடல்நிலை நன்றாக இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவக்குழு தெரிவித்துள்ளது. எனவே, அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த இடைக்கால ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்,’’ என்றார். பின்னர், நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘‘சிறையில் ப.சிதம்பரம் உள்ள அறை மற்றும் அதன் பகுதிகளில் சுகாதாரமான சுற்றுச்சூழல் இருக்கும்படி சிறை கண்காணிப்பாளர் பார்த்துக் கொள்ள வேண்டும்.  வீட்டில் தயாரித்து கொண்டு வரப்படும் உணவை அவருக்கு கொடுக்க வேண்டும். குடிப்பதற்கு மினரல் வாட்டர் கொடுக்க வேண்டும். கொசு கடிக்காமல் இருக்க கொசுவலை கொசுவர்த்தி சுருள் வழங்க வேண்டும். அவருடைய உடல்நிலையை தினமும் மருத்துவர்கள் பரிசோதிக்க வேண்டும்,’’ என்று தெரிவித்தார். பின்னர், இந்த வழக்கு விசாரணை 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Tags : P Chidambaram ,doctor ,Tihar jail ,AIIMS , P Chidambaram , Tihar Jail ,hospital treatment
× RELATED அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான...