×

செல்ல நாயை பிரிக்கிறாங்களே... பட்டதாரி பெண் தற்கொலை: கடிதம் சிக்கியது

கோவை: செல்லமாக வளர்த்த நாயை பிரித்து வேறு யாரிடமாவது கொடுத்து விடலாம் என்று பெற்றோர் கருதியதால் மனமுடைந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கோவை அடுத்த பெரியநாயக்கன்பாளையம், சாமிசெட்டிபாளையம் காமாட்சிபுரம் ராஜலட்சுமி கார்டனை சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகள் கவிதா(23) பட்டதாரி. இவர் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள பத்திர எழுத்தர் அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் 2 ஆண்டாக செல்லமாக ஒரு நாயை வளர்த்து வந்தார்.

இந்த நாய் இரவு நேரங்களில் குரைப்பதால் பக்கத்து வீட்டில் வசிப்பவர்களுக்கு தொந்தரவாக இருந்துள்ளது. இதனால் இவருடைய தந்தை பெருமாள், அந்த நாயை கவிதாவிடம் இருந்து பிரித்து வேறு யாரிடமாவது கொடுத்து விடலாம் என நினைத்தார். இதுகுறித்து மகள் கவிதாவிடம் கூறினார். இதை கவிதா ஏற்க மறுத்து மனமுடைந்து காணப்பட்டார். நேற்று முன்தினம் வீட்டில் எல்லோரும் தூங்கினர்.

அப்போது கவிதா மின் விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர். அப்போது தற்கொலைக்கு முன் கவிதா எழுதி வைத்திருந்த கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அதில், ‘அம்மா, அப்பா, தம்பி ஆகியோர் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள், எனது செல்ல நாய் (சீசரை) நன்கு கவனித்துக் கொள்ளுங்கள், என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை’ என்று எழுதப்பட்டிருந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Tags : graduate girl ,suicide , Pet dog, breakups, graduate girl, suicide
× RELATED தர்மபுரி அருகே இன்ஸ்டாகிராம்...