×

சீனாவை போல் ஒரே கட்சி ஆட்சி முறையை நோக்கி செல்கிறது இந்தியா: ராஜஸ்தான் முதல்வர் எச்சரிக்கை

ஜெய்ப்பூர்: சீனாவை போன்று இந்தியாவும் ஒரே கட்சி ஆட்சி முறையை நோக்கி வேகமாக சென்று கொண்டிருக்கிறது,’என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் எச்சரித்துள்ளார். சீனாவில், சீன கம்யூனிஸ்ட் கட்சி என்ற ஒரே கட்சி மட்டுமே தொடர்ந்து ஆட்சி செய்து வருகிறது. அதன் பொதுச் செயலாளராக இருக்கும் ஜி ஜின்பிங், நாட்டின் வாழ்நாள் அதிபராகவும் இருந்து வருகிறார். இவரே தொடர்ந்து ஆட்சி பொறுப்பில் நீடிக்கும் வகையில், நாடாளுமன்றத்தில் சட்டத்தை நிறைவேற்றியுள்ளார். இந்நிலையில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்,  ஜெய்ப்பூரில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: பாஜ தலைமையிலான மத்திய அரசு, முன்பு எப்போதும் இல்லாத வகையில் நாட்டை வழி நடத்துகிறது.

சீனாவை போன்று இந்தியாவும் ஒரே கட்சி ஆட்சி முறையை நோக்கி வேகமாக சென்று கொண்டிருக்கிறது. பாஜ.வுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகள், தாங்கள் ஜனநாயகத்தை நம்பாத கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கிறோம் என்பதை உணர வேண்டும். மத்திய அரசின் 100வது நாள் சாதனை விழா கொண்டாட்டத்தின் போது, பாஜ ஜனநாயகத்தை  அழித்து வருகிறது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி  குறிப்பிட்டு பேசினார். காங்கிரஸ் மட்டுமல்ல அனைத்து எதிர்க்கட்சிகளும் பாஜ.வை அதன் ஆட்சியை விமர்சித்து வருகின்றன.

இதற்கு முன்னர், கடந்த ஏப்ரல் மாதம் மக்களவை தேர்தலின் போது நடந்த பிரசாரக்  கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியபோது, அரசியல் மகாபாரதத்தில் மோடியும் அமித்ஷாவும் துரியோதனன், துச்சாதனன் போன்றவர்கள். கலவரம், வன்முறையை தூண்டி ஏராளமானவர்களை கொன்று அரசியலில் பாசிசத்தின் அரசர்களாக முடிசூட்டி கொண்டவர்கள், என்று கூறினார்.

அதன் பிறகு கடந்த ஜூன் மாதம், ரபேல் போர் விமான ஊழல், தேர்தல் நடத்தை விதிகளை மீறி அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு திருத்த மசோதாவை நிறைவேற்றியது உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்த நாளிதழுக்கு விளம்பரம் கொடுப்பதை பாஜ அரசு தடுத்து நிறுத்தியது. இதன் மூலம் தங்களை யாரும் எதிர்க்கக் கூடாது என்று மறைமுகமாக அரசு சுட்டிக் காட்டியது. காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கூறுகையில், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ ஆகியவற்றை மத்திய அரசு தவறாக பயன்படுத்தி வருகிறது என்று குற்றம்சாட்டினார். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Rajasthan CM ,China ,India , Like , China, one-party system , headed towards , India
× RELATED சொல்லிட்டாங்க…