பூட்டிய வீடுகளில் திருடிய நேபாளிகள் 5 பேர் கைது

பெங்களூரு: பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு நகைகளை திருடி வந்த 5 நேபாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.பெங்களூரு நகரில் பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு மர்ம நபர்கள் திருடி வருவதாக போலீசாருக்கு புகார் வந்து கொண்டிருந்தது. இதையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து திருடர்களை தேடி வந்தனர். குறிப்பாக வெளி மாநிலத்தில் இருந்து பெங்களூரு வந்து தங்கியிருந்த திருடர்களை குறி வைத்து இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று ஒயி்ட்பீல்டு போலீசார் 5 பேரை கைது செய்துள்ளனர். விசாரணையில் அவர்கள் நேபாளம் பஜ்காங் மாவட்டத்தை சேர்ந்த மங்கல் சிங், மனோஜ் பகதூர், சுதீப் தமணி, விஷால், வினோத்குமார் என்று தெரியவந்தது. இவர்களிடம் நடத்திய சோதனையில் ரூ.4.50 லட்சம் மதிப்பிலான 7.50 கிலோ எடை கொண்ட சில்வர் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இவர்களின் கைது நடவடிக்கையால் மாரத்தஹள்ளியில் 5, விவேக்நகர், வர்த்தூரில் தலா ஒரு வழக்கிற்கு தீர்வு கிடைத்துள்ளது. இதற்கு முன்னதாக சம்பங்கிராம்நகர், ஜீவன் பீமாநகர், சந்தாபுரா, மல்லேஸ்வரம் காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவாகியிருந்துள்ளது. 2007ம் ஆண்டு பெங்களூரு வந்த இவர்கள், பேப்பர், பால் பாக்கெட் எடுக்கப்படாமல் கிடக்கும் வீடுகள், மின் விளக்குகள் அணையாமல் எரிந்து கொண்டிருக்கும் வீடுகளை குறி வைத்து, திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர். பின்னர் நகைகளுடன் சொந்த ஊருக்கு சென்று, விற்பனை செய்துவிட்டு, மீண்டும் பெங்களூரு வந்து திருட்டில் ஈடுபட்டு வந்ததாக தெரியவந்தது. கைதானவர்கள் மீது ஒயிட்பீல்டு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Stories:

>