×

பட்டிவீரன்பட்டியில் ரூ.1.40 கோடியில் புதிய சாலை: விரைவில் பயன்பாட்டிற்கு வரும்

பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டியில் ரூ.1.40 கோடியில் அமைக்கப்பட்டு வரும் சாலை விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர். பட்டிவீரன்பட்டியிலிருந்து காந்திபுரம், சின்னகவுண்டன்பட்டி, தேவரப்பன்பட்டி வழியாக அய்யம்பாளையம் வரையுள்ள 2.3 கி.மீட்டர் தூரமுள்ள ரோடு போடப்பட்டு சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இதனால் இந்த ரோடு மிகவும் சேதமடைந்து காணப்பட்டது. இந்த ரோட்டில்தான் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளும், அரசு அலுவலகங்களும் உள்ளன. இந்த சேதமான ரோட்டில் மாணவ- மாணவிகள், அரசு ஊழியர்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.

இதனால் இந்த ரோட்டை புதுப்பித்து தர வேண்டும் என நீண்டகாலமாக இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் இதை ஏற்று தற்போது ஆத்தூர் மாநில நெடுஞ்சாலை உட்கோட்டம் சார்பில் சுமார் 1 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சாலை அமைக்கும் பணிக்காக தற்போது பட்டிவீரன்பட்டி மேல்நிலைப்பள்ளி சாலை, தேவரப்பன்பட்டி சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு 4 இடங்களில் பாலம் அமைக்கும் பணி முடிந்துள்ளது. மேலும் தற்போது 3.75 மீட்டர் அகலமுள்ள இந்த சாலை 5.5 மீட்டர் அகலமுள்ள சாலையாக விரிவு படுத்தப்பட்டு வருகின்றது.

மேலும் 200 மீட்டர் தூரத்திற்கு கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகின்றது. இந்த பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த சாலை அமைக்கும் பணியினை ஆத்தூர் உதவிகோட்ட பொறியாளர் ராஜசேகர், உதவி பொறியாளர் ஜோதிபாசு, ஆய்வாளர் மஞ்சுநாத் ஆகியோர் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Tags : road ,Pativeeranpatti , Pattiviranpatti, New Road
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி