×

புழல் சிறைச்சாலை குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடு: காவலர்கள் குடும்பத்தினர் அவதி

புழல்: சென்னை புழல் மத்திய சிறைச்சாலை குடியிருப்பு பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் சிறைச்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குடியிருப்பு அருகில் குளம்போல் தேங்கி உள்ளது. இந்த கழிவுநீர் அங்கு நிரம்பி அருகிலுள்ள சிறைச்சாலை பெட்ரோல் பங்க் வளாகத்திலும் தேங்கி உள்ளது. இதனால் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன் கொசு உற்பத்தியாகி டெங்கு, காலரா போன்ற நோய்கள் உருவாகும் சூழ்நிலை உள்ளது. இதன் அருகே காவலர்கள் தங்கி பணியாற்றுவதற்காக 3 கட்டிடங்கள் உள்ளன. சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் தங்கி பணியாற்ற முடியாமல் உள்ள நிலையில் தற்போது அந்த 3 கட்டிடங்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பொதுப்பணித்துறை சார்பில் கட்டி முடிக்கப்பட்டு சில ஆண்டுகள் மட்டுமே பயன்படுத்தி வந்த கட்டிடங்களை தற்போது எந்த சிறைச்சாலை அதிகாரிகளும், காவலர்களும் பயன்படுத்தாமலே உள்ளனர். இதனால் இந்த கட்டிடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. இங்கு குளம்போல் தேங்கி உள்ள கழிவுநீரை உடனுக்குடன் அகற்றி விட வேண்டும் என பலமுறை சிறைத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் கண்டும் காணாமல் உள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது.

எனவே டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் வருவதற்கு முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து சிறை வளாகத்தில் உள்ள கழிவுநீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சிறை காவலர்கள் குடியிருப்பை சேர்ந்தவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து சிறை காவலர் குடும்பத்தினர் கூறுகையில், “இங்குள்ள சிறை காவலர்கள் குடியிருப்பு மற்றும் சிறைச்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மழைக்காலங்களில் உரிய முறையில் அகற்றாமல் அங்கேயே தேங்கி நிற்பதால் குடியிருப்பு நுழைவு வாயில் அருகே குளம்போல்தேங்கி அருகில் உள்ள பெட்ரோல் பங்க்கிலும் தேங்கி உள்ளது.

இதனால் பெட்ரோல் போட வரும் பொதுமக்களும் சிறை காவலர்களின் குடியிருப்பிற்கு வரும் காவலர்கள், உறவினர்கள், நண்பர்கள் துர்நாற்றத்தை கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. தற்போது சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பருவமழை காரணமாக ஆங்காங்கே உள்ள கழிவுநீரால் டெங்கு, மலேரியா காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பரவி சிலர் குறிப்பாக குழந்தைகள் பலியாகி வருகின்றனர். எனவே சிறை வளாகம் முன்பு தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற முறையான கால்வாய்கள் அமைக்க வேண்டும். மேலும் இதன் அருகே பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு சில ஆண்டுகளே பயன்படுத்தி வந்த கட்டிடங்கள் பாழடைந்து உள்ளது.

இந்த கட்டிடத்தை சமூக விரோதிகள் பயன்படுத்தி வருவதால் இந்த வழியாகச் செல்லும் பொதுமக்கள் காவலர்கள் குடும்பத்தினர் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவுநீரை அகற்றி அருகில் உள்ள 3 கட்டிடங்களை புதுப்பித்து சிறை காவலர்கள் பயன்படுத்தி கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும்” என்றனர்.


Tags : area ,Pulla Prison ,guards ,puzhal , Sewage, prison dwelling, area, sewage , puzhal
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...