×

அம்மா உணவகங்களை மேம்படுத்த நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியை பயன்படுத்த திட்டம்: அதிகாரி தகவல்

சென்னை: அம்மா உணவகங்களை மேம்படுத்த பெரிய நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரி தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சியில் ஒரு வார்டுக்கு 2 அம்மா உணவகங்கள் வீதம் 200 வார்டுகளில் மொத்தம் 400 அம்மா உணவகங்கள் செயல்படுகின்றன. இதை தவிர்த்து முக்கிய மருத்துவமனைகளில் 7 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த உணவகங்களில் காலை நேரங்களில் இட்லி, பொங்கல், மதியம் சாம்பார் சாதம், கலவை சாதம் உள்ளிட்ட பல வகை சாதங்களும், இரவில் சப்பாத்தி உள்ளிட்டவை குறைந்த விலையில் விற்கப்படுகின்றன.

இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலிலதா மறைவுக்கு பிறகு அம்மா உணவகங்கள் முறையாக செயல்படுவதில்லை, என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். மேலும், அம்மா உணவகங்களில் இருந்து பலர் பார்சல் வாங்கி செல்வதாகவும், இதனால் பசியோடு வரும் பொதுமக்கள் உணவு கிடைக்காமல் திரும்பி செல்வதாகவும் புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சியில் உள்ள அம்மா உணவகங்களில் பார்சல் வழங்க தடை விதிக்கப்பட்டது. இதையும் மீறி பார்சல் வழங்கினால் ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நஷ்டத்தில் இயங்கிவரும் அம்மா உணவகத்தை லாபத்தில் இயக்குவது தொடர்பாகவும் அதன் செயல்பாடுகளில் மாற்றம் கொண்டுவருவது தொடர்பாகவும் ஆய்வு செய்ய சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை துணை ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் 7 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழு  உணவகங்களின் செயல்பாடுகள், நஷ்டத்தை ஈடுகட்ட எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், லாபத்தை ஈட்ட புதிய உணவுகளை அறிமுகப்படுத்துதல் உள்ளிட்டவைகள் தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: அம்மா உணவகங்களை மேம்படுத்த 8 திட்டங்களை செயல்படுத்தலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, அம்மா உணவகத்தை நடத்தவும், மேம்படுத்தவும் தனியாக ஒரு நிதியை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பெரிய நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியை திரட்டாலம் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பெரிய நிறுவனங்கள் தங்களின் சமூக பொறுப்பு நிதியை அம்மா உணவகத்திற்கு அளிக்க விருப்பம் தெரிவித்தால் அதை பெற்று, அம்மா உணவக நிதியில் சேர்க்கப்படும். இவ்வாறு சேர்க்கப்படும் நிதி அம்மா உணவகத்தை மேம்படுத்த செலவிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

100 கோடி நஷ்டம்
சென்னையில் உள்ள அம்மா உணவகங்களை இயக்குவதற்கு ஒருஆண்டுக்கு ரூ.140 கோடி வரையில் செலவாகிறது. ஆனால் அம்மா உணவகங்கள் மூலம் ரூ.30 முதல் ரூ. 40 கோடி  வருமானம் மட்டுமே கிடைக்கிறது. இதன்படி பார்த்தால் ஆண்டு ஒன்றுக்கு சென்னையில் உள்ள அம்மா உணவகங்கள் மூலம் மட்டும் ரூ.100 கோடி நஷ்டம் ஏற்படுவத குறிப்பிடத்தக்கது.

Tags : companies , Mom restaurants, upgrades, companies, plans
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...